பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. செம்பொன்செய் கோயில் பேரருளாளன் எம்பெருமானின் திருக்குணங்கள் பற்றி நாம் சிந்திக்கின்றோம். எம்பெருமானின் திருக்குணங்களுக்கு அளவே இல்லை. ஒரு பொருளுக்கு உளதாகக் கூறும் குணமானது தன்னைப் பெற்றிருக்கும் பொருளுக்கு மற்றொரு பொருளைக் காட்டிலும் ஒரு வேற்றுமை காட்டுவதால் அக்குணம் விசேஷணம் எனப்படும். இத்தகைய விசேஷணம் 'ஸ்வருப நிருபக விசேஷணம்’ என்றும், நிருபித ஸ்வருப விசேஷணம்’ என்றும் இருவகைப்படும். ஒரு பொருளின் ஸ்வரூபத்தை (Essential Nature) எந்த குணத்தையுடையதாகக் கூறியே விளக்கினாலன்றி அப்பொருளின் ஸ்வரூபத்தை அறிய முடியாதோ அந்தக் குணம் ஸ்வரூப நிருபக விசேஷணம்’ எனப்படும். ஒரு பொருளின் ஸ்வரூபத்தை விளக்கியபின் அதன் பெருமை புலப்படுவதற்கு எந்தக் குணங்கள் வெளியிடப் பெறுகின்றனவோ அவை நிருபித ஸ்வருப விசேஷணம்' எனப்படும். எம்பெருமானுடைய ஸ்வரூபத்தை சத்தியத்துவம், ஞானத்துவம், அனந்தத்துவம், ஆனந்தத்துவம், அமலத்துவம் என்னும் ஐந்து குணங்களையிட்டே விளக்க வேண்டும். ஆதலின் இவ்வைந்தும் ஸ்வருப நிருபக விசேஷணம்’ ஆகும். இவற்றுள் சத்தியத்துவம் என்பது, எப்பொழுதும் மாறுபடாத் தன்மை. ஞானத்துவம் என்பது, எப்பொழுதும் குறைவுபடாத ஞான சொரூபனாம் தன்மை. ஆனந்தத்துவம் என்பது, இங்குதான் இருக்கின்றான் என்று தேசத்தாலும், இப்பொழுதுதான் இருக்கின்றான் என்று காலத்தாலும், இந்தப் பொருளின் சொருபமாகத்தான் இருக்கின்றான் என்று பொருளினாலும் அளவிட முடியாதபடி எவ்விடத்திலும் எக்காலத்திலும் எந்தப் பொருளின் சொருபனாகவும் நிற்குந் தன்மை. ஆனந்தத்துவம் என்பது, ஆனந்த சொரூபனாய் நிற்கை. அமலத்துவம் என்பது, குற்றங்களில்லாத தன்மை.