பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி ... திருமெய்ய மலையாள நீயாள வளையாள மாட்டோமே." (ஆளா - ஆளுபவனே, நீ ஆள - உன்னுடைய ஆளுகைக்கு உட்பட்டிருக்குமளவில்; வளை ஆள மாட்டோமே - கையில் வளை தங்காமல் துன்பப் படவேண்டியதே.) என்று நைந்து வருந்துகின்றார். நீ ஆள வளையாள மாட்டோமே உன்னுடைய ஆளுகையில் அடங்கியிருப்பார்க்கு (அதாவது உன்னுடைய துணைவியராக இருப்பார்க்கு) கையில் வளை தங்கியிருக்கப் பிராப்தியுண்டோ? என்கை. விட்டுப் பிரியாமல் கூடியிருக்குங் காலத்திலோ மகிழ்ச்சி மிகுதியினால் உடம்பு பூத்து வளை வெடித்துப்போம்; பிரிந்த காலத்திலோ உடல் இளைத்து வளை கழன்றொழியும், ஆகவே, ஒருபோதும் வளை தங்கியிருக்கப் பிராப்தி இல்லை என்னலாம். இவ்விடத்தில் ஓர் இதிகாசம்; அம்மங்கியம்மாள் என்னும் ஓர் ஆசிரியர் நோயால் துன்புற்றிருந்தார். நஞ்சீயரும் நம்பிள்ளையும் அவரைக் கண்டு விசாரிக்க எழுந்தருளியிருந்தனர்; அப்போது அவர் மிகவும் மனம் நொந்திருப்பதைக் கண்டு, “சுவாமி, தேவரீர் சாமானிய மனிதரன்றே; எவ்வளவோ பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணியிருக்கின்றீர்; குணாநுபவத்தாலல்லது போது போக்கியறியீர், இப்படிப்பட்ட உம்மையும் எம்பெருமான் மற்றவர்களைப் போலவே இப்படித் துன்புறுத்துகின்றானே” என்றாராம். அதற்கு அவர் "நீயாள வளையாள மாட்டோமே” என்பதல்லவா கலியன் பாசுரம், எம்பெருமானுக்கு வாழ்க்கைப்பட்டால் துன்பப்பட்டுத்தானே இருக்க வேண்டும்” என்றாராம். பிறகு வெளியில் எழுந்தருளின நஞ்சியர் நம் பிள்ளையை நோக்கி, "பார்த்தீரா இவருடைய அத்யவசாயத்தை (எண்ணத்தை); என்ன பாசுரம் எடுத்துக் காட்டினார்” என்று அருளிச் செய்து மகிழ்ந்தனராம். அடுத்த திருமொழி தாய்ப் பாசுரமாகச் செல்லுகின்றது. ஆழ்வார் நாயகி தன்னை நோக்கிக் கதறுவதை அறிந்த வயலாளி மணவாளன் மனம் இரங்கி பரகால நாயகியைத் தாய்மார் முதலானோர் அறியாமல் உடன் போக்கில் கடத்திச் சென்றுவிட்டான். மகளின் படுக்கைத் தலையில் படுத்துக் கொண்டு உபசாரங்கள் பண்ணிக் கொண்டிருந்த திருத்தாயார் ஆயாசத்தால் சற்றுக் கண்ணயர்ந்தபோது இந்நிகழ்ச்சி நேரிட்டு விடுகின்றது. இருவர் நிலையையும் நன்கு அறிந்தவளாகையால் எம்பெருமானே இவளைக் கடத்திக்கொண்டு போயிருக்க வேண்டும் என்று அறுதியிட்டுப் பேசுகின்றாள் திருத்தாயார். 25. பெரி. திரு. 3.6:9