பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலாளி மணவாளன் 135 (கழன்று . வெளிச்செல்லும், கட்டாமல் . அடக்காமல்; உழன்று - வருந்தி; உய்ந்தேன் - நற்கதிபெற்றேன்; வாலிகாலன் - இராமன்) என்பது பாடல். “எம்பெருமானுக்கு அடியவனாயிருக்கின்ற ஆன்மாவின் சொரூபத்திற்கு விருத்தமான தவம் செய்தல், புண்ணியத் தீர்த்தமாடல் முதலான உபாயங்களை மேற்கொள்ளாமல் ஆன்ம சொரூபத்திற்கு அநுகூலமாய் சித்தோபாயமான எம்பெருமானைப் பற்றுதலாகின்ற பிரபத்தி உபாயத்தை மேற்கொண்டு எளிதில் நற்கதி பெற்று ஈடேறினேன் என்கின்றார் திவ்விய கவி. திருமங்கையாழ்வார் தாம் பிறந்த கள்ளர் குடிக்கேற்ப இளமையில் ஆயுதப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர். சோழ அரசனின் சேனாதிபதியாகவும், அவனுக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாகவும் இருந்து திருமங்கை நாட்டை ஆண்டவர். கொற்றவனுக்குக் கொடியவருடன் கொடும் போர் நேருங் காலங்களில் படைகளுடன் முன்சென்று பகைவென்றவராதலின் இவருக்குப் பரகாலன் என்ற திருநாமமும் உண்டு. பரகாலன் - பகைவர்கட்கு எமன், எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கணம் செய்த தலமாதல் பற்றி இத்தலம் திருவாலி என்ற திருநாமத்தால் வழங்கி வருகின்றது. திருமங்கையாழ்வார் திருவவதரித்த திருத்தலமாகிய குறையலூர் ஆலிநகருக்கு அருகில் உள்ளது. திருநகரியிலும் திருவாலியிலும் திருமங்கையாழ்வாருக்கு முக்கியத்துவம் உண்டு. திருமங்கை நாட்டு மன்னன் அல்லவா? ஆண்டுதோறும் பங்குனி உத்தரத்தன்று நடைபெறும் வேடுபறி உற்சவம் பெரும் புகழ் பெற்றது. வேடனாக நின்று வழிப்பறி செய்து அதனால் பெற்ற செல்வத்தைக்கொண்டு பாகவதர்கட்கு ததியாராதனம் செய்ததை நினைவூட்டும் வண்ணம் நடைபெறும் திருவிழா இது. திருநகரியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வேதராசபுரம் என்னும் ஊரிலுள்ள ஒரு பெரிய மைதானத்தில் இத்திருவிழா நடைபெறுகின்றது. இச்செய்திகளை அறிந்த வண்ணம் திருத்தேவனார்த் தொகை என்னும் திவ்விய தேசத்தை நோக்கிப் பயணமாகின்றோம்.