பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தேவனார்த் தொகை தெய்வநாயகன் 137 (பிரம்மம்) மூலப்பகுதியின் விகாரமாகிய எல்லாப் பொருள்களுள்ளும் அந்தர்யாமியாக மறைந்துள்ளான். மூலப்பகுதியின் விகாரமாகிய உடம்பிற்கு வளர்தல், பருத்தல், குறைதல் முதலிய விகாரங்கள் உண்டு. அவ்வுடம்பினுள்ளிருக்கும் உயிருக்கு அத்தகைய விகாரம் ஒன்றும் இல்லை. ஆயினும், தான் ஆற்றிய வினைகட் கேற்ப உடம்பைப் பெற்றிருத்தலால் இவ்வுடம்பைப் பற்றிய இன்ப துன்ப உணர்ச்சிகள் உயிருக்கு உண்டு. தனக்கு உடலாகவுள்ள இந்த உடம்பினுள்ளும், உயிரினுள்ளும் அந்தர்யாமியாகவுள்ள இறைவன் உடம்பினுடைய விகாரங்களையும், உயிரினுடைய இன்ப துன்ப உணர்ச்சிகளையும் அடைவதில்லை. இறைவன் வினை காரணமாக இல்லாமல் தன் விருப்பினால் இவ்விரண்டனுள்ளும் அமைந்திருத்தலால், இவ்விரண்டின் தன்மைகளையும் அவன் அடைவதில்லை. இதுவே சரீர - சரீரி பாவனையின் தத்துவமாகும். திருத்தேவனார் தொகையை நோக்கி நாம் மாட்டு வண்டியில் வந்து கொண்டிருக்கும்போது இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் உள்ளன. இந்த ஊரின் பெயர் திருத்தேவனார்தொகை என்று ஏற்பட்டதன் காரணத்தையும் சிந்திக்கின்றோம். பாற்கடல் கடைந்த போது வெளிவந்த திருமகளை இத்தலத்தின்தான் எம்பெருமான் திருமணம் புரிந்து கொண்டதாகவும், அத்திருக்கோலத்தில் இங்கு எழுந்தருளியுள்ளதாகவும் புராண வரலாற்றால் அறிகின்றோம். இந்தத் திருமணத்திற்கு தேவர்கள் திரண்டு வந்தனர் என்றும், அங்ங்னம் இவர்கள் திரண்ட இடம் என்பது பற்றி இத்திருத்தலம் திருத்தேவனார் தொகை என்று திருநாமம் பெற்றது போலும் என்றும் ஊகிக்கின்றோம். தேவனார் என்பது தேவர்களையும், தொகை என்பது நெருங்கி நின்ற இடத்தையும் குறிப்பனவாகக் கொள்ளலாம். இந்த இடத்தைத் திருமங்கையாழ்வார், “கார்ஆர்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும்இடம் சீர்ஆர்ந்த பொழில நாங்கைத் திருத்தேவ னார் தொகை” (கார் ஆர்ந்த - மேகத்தோடொத்த சீர் ஆர்ந்த - அழகு பொருந்திய பொழில் - சோலை) என்று குறிப்பிடுவர். இத்திருத்தலம் திருநாங்கூர்த் திருப்பதிகளுள் நான்காவதாகும். 1. பெரி. திரு. 4.1.10