பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தன்பள்ளிச் செங்கண்மால் 163 பார்த்தனுக்காக (அர்ச்சுனனுக்காக) சேவை சாதிக்கும் இடமாதலால் இத்திருத்தலம் இப்பெயர் பெற்றது என்பர். பார்த்தன் பள்ளி திருநாங்கூர்த் திருப்பதிகளுள் பதினொன்றாவதாகும். இது சீகாழி இருப்பூர்தி நிலையத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. திருநாங்கூரிலிருந்து வண்டி மூலம் வந்தால் நான்கு கிலோ மீட்டர் தொலைவிலும் கால் நடையாக வந்தால் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு தங்குவதற்கோ உணவு கொள்ளுவதற்கோ எவ்விதமான வசதிகளும் இல்லை. திருநாங்கூரிலிருந்து காலையில் புறப்பட்டு வரலாம்; வழிபாட்டினை முடித்துக்கொண்டு வடதிசையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருமணிக்கூடம் வந்து அங்கும் வழிபாட்டை முடித்துக்கொண்டு திருநாங்கூரை வந்தடையலாம். பார்த்தன் பள்ளி வந்தடைந்ததும் திருமங்கையாழ்வார் இத்திருத்தல எம்பெருமானைப் பற்றி மங்களா சாசனம் செய்துள்ள திருமொழியில் ஆழங்கால்படுகின்றோம். இத்திருமொழி தாய்ப் பாசுரமாகச் செல்லுகின்றது. பரகால நாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார் பார்த்தன் பள்ளிப் பெருமாளிடத்தில் தன் மகள் காதல் கொண்டு இருக்கும் நிலையை வெளியிடுகின்றார்; அப்பெருமானை நினைந்து வாய்வெருவிக் கூறும் படிகளை ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு வகையாகக் கூறுகின்றார். “கவளயானைக் கொம்பொசித்த கண்ணனென்றும் காமருசீர்க் குவளைமேகம் அன்னமேனி கொண்டகோன்என் ஆனையென்றும் தவளமாட நீடுநாங்கைத் தாமரையாள் கேள்வனென்றும் பவளவாயாள் என்மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே” (கவளம் . யானையின் உணவு; ஒசித்த . முறித்தொழித்த காமரு - (காமம்+தரு) - ஆசையை விளைவிக்கின்ற சீர் - அழகு அன்ன - ஒத்த மேனி - உடல்; கோன் - சுவாமி, தவளம் - வெண்மையான) பார்த்தன் பள்ளியில் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானை எப்படி எப்படி எல்லாம் எண்ணுகின்றாள் என் மகள் தெரியுமா? 'குவலயாபீடம் என்ற யானையின் கொம்புகளைச் சேற்றிலிருந்து முள்ளங்கியைப் பிடுங்குவதுபோல எளிதில் பிடுங்கி அதன் உயிரைத் தொலைத்திட்ட கண்ணன், அப்படிப்பட்ட சூரன் அவன். அவன் 5. பெரி. திரு. 4.81