பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. சித்திரக்கூடத்துச் செங்கண்மால்


எம்பெருமானின் திருவடியின் பெருமையினை எல்லாச் சமயங்களும் போற்றிப் புகழும். ஆயினும், வைணவ சமயம் அவ்வாறு புகழ்வதில் ஒரு தனி ஊற்றத்தைக் காணலாம். ஆளவந்தார் என்று வைணவர்களால் போற்றப்பெறும் யமுனைத் துறைவர் தம்முடைய ‘தோத்திர ரத்னத்தில்’ இதன் பெருமையினை அழகுற ஓதியுள்ளார். தேனையே உணவாக உடைய வண்டு மதுவிரதம் - தேன் நிறைந்த தாமரை மலரில் இருந்து கொண்டிருக்க அதனை விட்டு, நாவினை நனைப்பதற்கும் போதாமல் இருக்கின்ற தேனையுடைய முள்ளில் பூவைக் கண்ணாலும் பாராததைப் போன்று எம்பெருமானுடைய தேனே மலரும் திருவடித் தாமரைகளினுடைய இனிமையில் மனம் அழுந்தின ஒருவன் மற்றொரு அற்ப இன்பத்தை விரும்பமாட்டான் என்கின்றார்.[1] அடுத்த சுலோகத்தில் அவனுடைய திருக்கழல் இணையை வணங்குவதாகச் செய்யும் அஞ்சலி[2]யின் பெருமை அளவிறந்ததென்று அருளிச் செய்கின்றார்.

அடையத்தக்க பொருளாக இருக்கும் எம்பெருமான் அவனை அடையும் வாயாகவும் அமைவான். அவனை அடைவதற்கு எம்பெருமாட்டி புருஷகாரமாக அமைவாள். இது வைணவ தத்துவம். இவர்கள் இருவரும் சேதநரைக் கைவிட்டாலும், எம்பெருமானுடைய திருவடிகள் தம்மைப் பற்றினாரைக் கைவிடா. அவை மிக்க உறுதியுடையனவாகும். இதனை,


“பிராட்டியும் அவனும் கைவிடினும், திருவடிகள்
விடாது, திண்கழலாயிருக்கும்”
[3]

  1. 1. தோத்தர ரத்னம் - 27
  2. 2. அஞ்சலி - அஞ்ஜலி. கைகளைக் கூப்புவதற்கு அம்ஜலி என்று பெயர். இச்செய்கை (அம்ஜலயதி) எம்பெருமானை நீர்ப்பண்டமாக உருகச் செய்தலால் இதற்கு இப்பெயர் வந்தது. இஃது ஓர் அடையாளமாகும்.
  3. 3. முமுட்சுப்படி - 146.