பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி இங்கு அர்ச்சாவதார நிலையில் கோயில் கொண்டிருப்பவரே தில்லைக் கோவிந்தராசர். சித்திர கூடத்துச் செங்கண்மால். இவர் தில்லைச் சிற்றம்பலவனின் திருநடனத்தை அறிதுயில் கொண்ட நிலையில் அநுபவித்து மகிழ்கின்றார். கோயில்’ என்றால் வைணவர்கள் திருவரங்கத்தையும் சைவர்கள் சிதம்பரத்தையும் குறிப்பது மரபு. இந்தப் பெயர் ஒற்றுமை கருதியே திருவரங்கத்தில் அறிதுயில் கொண்டுள்ள அரங்கநாதனைப் போல் கோவிந்தராசரும் இங்கு வந்து காலை நீட்டிப்படுத்துக் கொண்டார் போலும். தில்லைச் சிற்றம்பலவனும் மனம் ஒப்பித் தனது பெரிய மாளிகையில் தன் கனகசபைக்கு அருகிலேயே ஒரு பகுதியை ஒதுக்கித் தந்து மகிழ்கின்றனன் போலும். தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவரும் ஆனந்தக் கூத்தனைச் சேவிப்பது போலவே கோவிந்தராசரையும் சேவிக்கின்றனர். இதனை, மூவாயிர நான்மறை யாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.' என்று திருமங்கையாழ்வாரும், “தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் அந்தணர்கள் ஒருமூவா யிரவர் ஏத்த” என்று குலசேகரப் பெருமாளும் குறிப்பிட்டிருப்பதால் அறியலாம். இவற்றால் ஆழ்வார்கள் காலத்தில் கோவிந்தராசரின் வழிபாடுகள் தில்லை மூவாயிரவரான தீட்சிதர்களிடமே இருந்திருக்கக் கூடும் எனக் கருத இடந்தருகின்றது. சில நூற்றாண்டுகட்கு பின்னர்தான் (கி.பி. 1543 இல்) தனிப்பட்ட வழிபாடுகள் ஏற்பட்டனவாக அறியக் கிடக்கின்றது. இந்தக் கோவிந்தராசரை குலசேகராழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். குலசேகரர் இராமாவதாரத்தில் மிகவும் ஈடுபட்டவர் என்பது எல்லோரும் அறிந்த செய்தியாகும். தசரதச் சக்கரவர்த்தி இராமனைப் பிரிந்த அளவில் புலம்பிய ‘புலம்பல் தன்னை” இரங்கிப் பேசின பேச்சுகளின் வடிவமாக ஆழ்வார் அருளிச் செய்த திருமொழியால் இதனை அறியலாம். "கொல்லணைவேல் வரிநெடுங்கண் கெளசலைதன் குலமதலாய்! குனிவில் ஏந்தும் மல்லணைந்த வரைத்தோளா! வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் 7. பெரி. திரு. 3-2:8 8. பெரு. திரு. 10:2 9. பெரு. திரு. 10:11