பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிச் சீராமவிண்ணகரத் தாடாளன் 15 கின்ற இந்த முத்துகளைக் கொக்குகள் கண்டு அவற்றைத் தம்முடைய முட்டைகள் என்று மயங்குகின்றன. அவற்றைச் சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டுள்ளன. கழனிகளில் எங்கும் தாமரை மலர்கள் நிறைந்துள்ளன. மீன்கள் குறுக்கும் நெடுக்குமாகத் துள்ளிக் குதிக்கின்றன (2). கழனிகளில் பயிர்களினிடையே உள்ள நெய்தல், குவளை, குமுதம், தாமரை இவற்றைக் களை பறிக்கும் கடைச்சிமார்கள் நெய்தல், குவளை மலர்களைத் தங்கள் கண்களாகவும், சிவந்த ஆம்பல் (குமுதம்) மலர்களைத் தங்கள் வாயாகவும், தாமரை மலர்களைத் தாங்கள் முகமாகவும் மயங்கிக் களை பறியாமல் கழனியை விட்டு வெளியேறுகின்றனர் (3, 5). கடலில் உள்ள சங்குகள் அவ்விடத்தை இகழ்ந்துவிட்டு நீங்கிச் சீகாழியில் வந்து சேர்கின்றன. தாழைகள் நிறைந்த கழனிகட்கு வருகின்றன. பின்னர் மழை நீர் வெள்ளமாகப் பெருகி வருகின்ற வாய்க்கால்களின் மூலம் ஊரிலுள்ள விதிகளில் வந்து சேர்ந்து சங்குகளையும் முத்துகளையும் ஈனுகின்றன (7). அணில்கள் கிளை கிளையாகத் தாவித் தவழ்வதனால் பாக்கு மரங்களின் பழுத்த காய்கள் உதிர்ந்து விழுகின்றன. அவை பலாமரங்களின் காய்களின் கனத்தால் தாழ்ந்த கிளைகளில் நெருங்கியிருக்கும் பருத்த கனியப் பழுத்த பலாப் பழங்களின்மீது வீழ்வதால் அவை நசுங்கித் தேனைப் பொழிகின்றன (8). வண்டுகள் தம்முடைய பேடையோடும் சேர்ந்திருந்து நீர் நிலைகளிலுள்ள தாமரைப் பூவில் புகுந்து தேனைப் பருகி, அங்கே உறங்கி, அதன் பிறகு தாழை மடல்களில் பொருந்தியுள்ள பூந்தாதுத் துகள்களில் புரண்டு களித்து இசைபாடுகின்றன (9). இங்ங்னம் சீகாழியின் மருத நிலவளத்தைக் காண்கின்றோம். சீகாழி நகரக் காட்சியில் ஈடுபடுவோம். நகரிலுள்ள பெரிய மாடங்களில் பதிக்கப்பெற்ற நீல மணிகள் அந்திப் பொழுதை ஆதாரமாகவுடைய இருளை அதிகப்படுத்துகின்றன. அவற்றின் நடுவே அழுந்தியுள்ள முத்துகள் குளிர்ந்த திங்களின் நிலவொளியைக் காட்டுகின்றன. இவற்றின் இடை இடையே அழுத்தப் பெற்றுள்ள பவளங்கள் எழுஞாயிற்றின் சிவந்த ஒளியைப் பரப்புகின்றன (4). நகரிலுள்ள மாளிகைகள் மலைபோல் உயர்ந்துள்ளன. அந்த மாளிகையின் மீதுள்ள தளத்தில் நின்று உடுக்கை இடை மாதர்கள் நட்புடன் உரையாடி மகிழ்கின்றனர். அவர்களின் தாமரை போன்ற முகத்தின் ஒளியைக் கண்ட திங்கள் வெள்கி வருந்துகின்றான். நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், ஐந்து பெரு வேள்விகள், ஏழு சுரங்கள், வீதி நிறைந்த திருவிழாச் சிறப்புகள் ஆகியவற்றால் புகழ்பெற்றது இத்திருத்தலம் (1).