பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி எம்பெருமானுக்குச் செளரிராஜன் என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும் விளக்குகின்றார். இது பற்றிய வரலாறு : இறைவனுக்குச் சாத்தவேண்டிய மலர்கள், மலர் மாலைகள் அரண்மனையிலிருந்து அனுப்பப்பெற்று வருகின்றன. இவை தவறாகப் பயன்படுத்தப்பெற்று வருவதாகக் கேள்வியுறுகின்றான் அரசன். இதனைப் பரிசோதிக்க வருவதாகச் செய்தியும் அனுப்புகின்றான். அர்ச்சகர் அவசர அவசரமாக மாலையைத் தருவித்து இறைவனை அதனால் அணி செய்கின்றார். பிரசாதமாகப் பெற்ற மாலையில் சிறிது முடி (மயிர்) ஒட்டி இருப்பதைக் காண்கின்றான். காரணம் கூறுமாறு அர்ச்சகரை வினவுகின்றான் அரசன், அர்ச்சகர் அம்முடி இறைவனுடையது என்று சமாதானம் கூறுகின்றார். அரசனுக்குத் திருப்தி இல்லை இச்சமாதானம். தான் அடுத்த முறை சோதனைக்கு வரும்போது இதனை மெய்ப்பிக்கவேண்டும் என்று கூறிச் செல்லுகின்றான். தன்னைக் காத்தருளுமாறு இறைவனை வேண்டுகின்றார் அர்ச்சகர். அடியாரைக் காத்தருளும் எம்பெருமான் அடுத்த முறை அரசன் சோதனைக்கு வருங்கால் தலையில் குடுமியுடன் சேவை சாதிக்கின்றான். இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் நாம் திருக்கோயிலை வலம் வருங்கால் திருக்கோயிலின் விமானம் நம் கண்ணில் படுவதில்லை. இந்த எம்பெருமானின் நான்கு திருத்தேவியார்களுள் ஒருத்தி வலைச்சியார் (மீன் பிடிப்பவள்). இதன் காரணமாக ஆண்டுக்கொருமுறை பரதவர்கட்கு இன்றும் சிறப்புப் பிரார்த்தனை அமைக்கப் பெறுகின்றது. மாசி மகத்தன்று எம்பெருமான் கடலைக் காணும் வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. இச்செய்திகளை அறிந்த வண்ணம் திருக்கோயிலை விட்டு வெளியில் வருங்கால் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வருகின்றது. பேறு தரினும் பிறப்பிறப்பு நோய்மூப்பு வேறுதரினும் விடேன்கண்டாய் - ஏறுநீர் வண்ணபுரத்தாய் என்மனம் புகுந்தாய் வைகுந்தர் கண்ணபுரத் தாய்உன் கழல்.’ (பேறு - புருஷார்த்தம்; வேறு . மாறாக, ஏறுநீர் - கடல்நீர் புரம் - உடல்; வண்ணம் . நிறம்; கழல் - பாத அணி) என்ற பாசுரத்தைக் கொடிமரத்தருகில் நின்று மிடற்றொலி கொண்டு ஓதி உளங் கரைகின்றோம். “எம்பெருமானே, நீ எனக்கு வீடுபேறு தரினும், பிறப்பு இறப்பு முப்பு நோய் இவற்றைத் தந்தருளினும் 27. நூற்றெ. திருப். அந். 17