பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி திருவழுந்துர் என்ற திவ்விய தேசத்தையும் அங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அஞ்சனக் குன்றத்தையும் திருமங்கையாழ்வார் ஒருவர் மட்டிலுமே தம் திருப்பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். பேருந்தில் வரும்போதே ஆழ்வார் பாசுரங்களை அசை போடுகின்றோம். நீர் வளமும் நிலவளமும் அமைந்த சூழ்நிலை நம் மனத்தை கவர்கின்றது. இஃது ஆழ்வார் மனத்தையும் கவர்ந்ததனால் இதனை அவர் தம் பாசுரங்களிலும் குறிப்பிடுகின்றார். ஆழ்வார் காட்டும் இயற்கைச் சூழ்நிலையில் நம் மனம் ஈடுபடுகின்றது. தஞ்சை மாவட்டம் முழுதுமே பொன்னி நதி வளம் கொழிக்கும் சூழ்நிலையாகும். அழுந்துர் வளத்தை ஆழ்வார், மலைத்திகழ்சந்து அகில்கணகம் மணியும் கொண்டு வந்துஉந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து அணி அழுந்துார்’ (மலை - குடகு மலை; சந்து - சந்தனமரம்; அகில் - கட்டை, கனகம் - பொன்; மணி - இரத்தினம்; மடை - நீர் பாயும் வழி) என்று காட்டுகின்றார். காவிரி பெருகும்பொழுது குறிஞ்சி நிலக் கருப்பொருளாகிய சந்தனம், அகில் முதலியவற்றைப் புரட்டி அடித்துக்கொண்டு வரும். இவை கழனிகளில் நீர் மடை வழியாகப் பாய்தலினால் மிக்க வளத்தையுண்டாக்கிப் பெருஞ் சிறப்பெய்தும் திருவழுந்துளர். தான் பெருகும்பொழுது பொன்னைக் கொழித்துக்கொண்டு (செம்மண்ணைக் கரைத்துக் கொண்டு வருதலால்? - செம்மண் வண்டல் பயிர்கட்கு நல்லது) வருவதால் காவிரி பொன்னி என்ற திருநாமம் பெற்றது. எம்பெருமான் பெருந்துயரத்தினால் வருந்துகின்ற அன்பருள்ள இடங்களில் சென்று பாதுகாப்பது போலவே, இக்காவிரியின் வெள்ளமும் வேண்டும் இடங்களிலெல்லாம் வந்து பாயும் என்று நயந்தோன்றுமாறு அருளிச் செய்துள்ளார் ஆழ்வார் என்பதைச் சிந்திக்கின்றோம். அரச சின்னமாகிய வெண்சாமரை வீசவும், வாத்தியங்கள் ஒலிக்கவும், ஒரரசன் தன் பட்டத்து அரசியுடன் சீரிய சிங்காதனத்தின் மீது வீற்றிருத்தல்போல, இத்திருப்பதியில் செந்நெற் பயிர்களாகிய சாமரைகள் வீசவும் சங்குகள் முழங்கவும் அன்னப் பறவைகள் தமது பேடைகளுடன் செந்தாமரை மலர்களில் ஏறி வீற்றிருக்கும் (7-8-2). மற்றும், தாமரைப் பூக்களின்மேல் வரி வண்டுகள் இசைபாடா நிற்க, 7. பெரி. திரு. 7.8:3