பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி அழுந்துர் நின்ற அஞ்சனக் குன்றம் 65 அந்த இசைக்கேற்ப அன்னப்பறவை தன் பேடையுடன் சேர்ந்து நடனம் ஆடும் (7.5-9). இவ்வூரைச் சுற்றிலுமுள்ள வயல்களில் நெல்லுக்குக் களையாக முளைத்த குவளைப் பூக்கள் மாதர்களின் கண்களையொத்திருக்கும். நீர் நிலங்களிலுண்டான ஆம்பல் மலர்கள் அவர்களது வாய்போன்று விளங்கும்; இதழ்மிக்க தாமரைப் பூக்கள் அவர்களது முகம் போன்று திகழும் (7.5-10). வயல்களில் உள்ள பாக்கு மரங்களில் முதிர்ந்த பழங்கள் பவளத்தையும், பசுங்காய்கள் மரகதத்தையும், விரிந்த பாளைகள் வெண்முத்துகளையும் நினைப்பூட்டும். வாழை மரங்கள் எம்மருங்கும் குலைகளுடன் நிறைந்து நின்று நிலச் செழிப்பினை நிலைநாட்டும் (7.88). வயல்களிலுள் குருகினங்கள் திரள்திரளாக மீன்களைப் பிடிக்க நீர் நிலங்களில் வந்து இழியும்; தம் வாய்க்குள் அடங்கக் கூடிய சிறு மீன்களைப் பிடித்துக் கதுப்பிலே அடக்கிக் கொண்டிருக்கும். இந்நிலையில் வேறொரு பெரிய மீன் வந்து தோன்ற, அதனைப் பிடிக்க அஞ்சிப்போய், பின்னையும் ஆசையினால் அதனை நெருங்கிக் கிட்டும். இந்த வருணனையின் உட்கருத்தைப் பெரியவாச்சான் பிள்ளை “பாரத ஸ்மரத்தில் பீஷ்மாதிகள் அதிரதர், மஹாரதர்' என்றிங்ங்னே பேர்பெற்று ஜீவித்திருந்தோம், இப்போதாகப் பூசல் கோழைகளாக வெண்ணாது, என்று ஸாரதி பக்கலிலே வந்து கிட்டுவது, தேர்க்காலிலே உழங்குண்டு போக வொண்ணாதென்று அகலுவதாய்க்கொண்டு அவர்கள் படுவனவற்றைப் படா நின்றன வாய்த்துக் குருகினங்களும்” என்று வெளியிடுவதை நினைந்து அநுபவிக்கின்றோம் (7.52). குட்டிக்கு இரைதேடப் போகும் புள் தனியே செல்லாது தன் காதற் பெடையோடு சென்று, சேற்றைக் கண்டவிடத்தும் பின்வாங்காது, இரைதேடித் திரியும். இங்கே ஒரு சங்கை பிறக்கலாம். “மீன்கள் நிறைந்திருக்கும் இடத்தில் இரைதேடும் என்பது எப்படிப் பொருந்தும்? மீன் அருமைப் பட்டிருந்தாலன்றோ இரை தேட வேண்டும்? என்பதாக, புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி என்றுள்ள சொற்போக்கை நோக்கினால் ஐயம் எழக் காரணம் இல்லை. அங்குள்ள மீன்கள் நிலவளத்தாலே துணும் துலாமும் போலே தடித்திருக்கும். அவை பறவைக் குஞ்சுகளின் வாய்க்கு அடங்க மாட்டாவாகையால், பொருத்தமான சிறிய மீன்களைத் தேடிப் பிடிக்க வேண்டுமல்லவா? இந்த நுட்பத்தையும் சிந்திக்கின்றோம் (7.4) பாக்கு மரங்கள் நிறைந்துள்ள சோலைகளெங்கும் வண்டுகள் இசை பாடும்; குயில்கள் கூவும், மயில்கள் கூத்தாடும்; இந்தச் சூழ்நிலையில் அலைகளையுடைய காவிரியின் நீர் பக்கங்களில் சுற்றிப் பாய்தலினால் ஊரின் அழகை மிகுவிக்கும் (7-84).