பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி இனி ஆழ்வார் காட்டும் அணி அழுந்துரின் அழகில் ஆழங்கால்படுவோம். ஊர் எப்போதும் கார்காலத்தோற்றத்துடன் இருக்கும். காற்றும் துகள்களும் மேக படலங்களும் சிறப்பாகக் கார்காலத்தில் காணப் பெறும். அதுபோலவே, துகிலின் கொடியும் தேர்த்துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய் அகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார் வீதி அழுந்துரே' என்கின்றார் ஆழ்வார். அங்குள்ள மாடமாளிகைகள் மேக மண்டலத்தளவும் ஓங்கியிருக்கும். மாளிகைகளின் முனையிலே பாதுகாப்புக்கு உறுப்பாக சூலங்கள் நாட்டப் பெற்றிருக்கும். அவை மேகங்களின் கீழ் வயிற்றை இடித்துப் பிளக்க, மழை சொரியும் (7. 5-6). இவ்வூர் விதிகள் கடல்போல் நீண்டிருக்கும். மாளிகைகள் சுண்ணச் சாந்திட்டு வெளுத்திருக்கும்; அவை விண்ணுலகத்தளவும் ஓங்கியிருக்கும். சூரியனின் கதிர்களைக் கரும்பாலைப் புகை வந்து மறைத்து எங்கும் நிழல் செய்யும் (7.5-7). இங்குள்ள மாதர்கள்; தேன் ஒழுகும் கூந்தலையுடையவர்கள். கொம்புகள் செறிந்திருக்கும் குருக்கத்தியின் மேலே, செருக்காலே தளிரையும் பூக்களையும் கோதி மதுபானம் பண்ணின வண்டினங்கள், அவற்றை விட இன்பம் மிகுந்ததோர் இடம் தேடிப்போய் இராத் தங்கவேண்டும் என்று எண்ணங்கொண்டு இங்குள்ள மகளிரின் கூந்தற்கற்றையில் ஏறும் (7.5-3). இங்குள்ள பெண்கள் பொன்மயமான சிலம்புகளைக் காலிலணிந்து கொண்டு நடனம் செய்வதால் உண்டாகும் ஒலி ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் (7.5-8). இவ்வூர் மகளிர் கிளியைப் போன்ற இன்சொல்லையும் அன்னப் பேடை போன்ற மென்னடையையும் உடையவர்கள் (7-85), திருவிழாக் காலங்களில் திருவீதியில் நடைபெறும் விழாக் காட்சிகளைக் காணும் பொருட்டு வீதியின் இருபுறங்களிலுமுள்ள மாளிகையின் திண்ணைகளில் ஆடு ஏறு மலர் குழலார் ஏறி நின்று காட்சிகளைக் கண்ணுறுவர் (7-8-9). திருவழுந்துரிலுள்ள நான்மறைவல்ல அந்தணர்கள் எப்போதும் ஏதாவதொரு வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். இவர்கள் யாவரும் இளைஞர்களே. அவர்கள் மழைபொழியும் பொருட்டுச் செய்யும் வேள்வியால், வேள்வியைத் தொடங்கும் முன்னரே மழை பொழிந்து விடுகின்றது. காரணம் உண்டான உடனே ஒரு நொடிப் பொழுதும் தாமதியாமல் காரியம் உண்டாகி விடுகின்றது (7.5-1). 8. பெரி. திரு. 7.5:5