பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி அவன் எழுந்தருளியிருக்கும் கோயில் அண்ணன் கோயில் என்று ஆகின்றது. இந்தக் கோயிலின் திருநாமமே திருத்தலத்துப் பெயராகவும் ஆகிவிடுகின்றது. 'திருவெள்ளக்குளம்” என்ற பெயரைக் கேட்டவுடன், குமுதவல்லியின் நினைவு வருகின்றது. திருவெள்ளக்குளத்தில் மிகச் சிறந்ததொரு தாமரைப் பொய்கை இருந்தது. ஒரு சமயம் உம்பர் உலகத்து அப்சரப் பெண்கள் அங்கு நீராடிச் சென்றனர். அவர்களுள் திருமாமகள் என்பாள் தன் இச்சையால் தெய்வ வடிவைத் துறந்து மானிடவடிவங்கொண்டு தனியே குமுதமலர் கொய்து நிற்கின்றாள். அநுட்டானத்திற்காக வைணவ மருத்துவர் ஒருவர் அங்கு வர நேரிடுகின்றது. அவளை அவர் யாரென்று வினவ, அவன் தன்னுடன் வந்த மகளிர் தன்னை விட்டுப் போய் விட்டனர் என்றும், தனியிருந்து அலைகின்ற தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகின்றாள். மக்கட் பேறு இல்லாத இம்மருத்துவர் அம்மகளைத் தன் இல்லத்திற்கு இட்டுச் சென்று தம் துணைவியிடம் ஒப்படைக்கின்றார். குமுதமலர் கொய்து நின்ற அவளுக்குக் 'குமுதவல்லி என்ற திருநாமம் இட்டு வளர்த்து வருகின்றனர். குமுத வல்லிக்குத் திருமணப் பருவம் வருகின்றது. இவளுக்கேற்ற கணவன் இவ்வுலகில் கிடைப்பானா என்ற கவலை வளர்ப்புப் பெற்றோருக்கு வருகின்றது. இப்பெண்மணியின் குணநலன்களையெல்லாம் கேள்வியுற்ற திருமங்கை மன்னன் அம்மருத்துவர் இல்லத்திற்கே வந்து அவருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் குமுதவல்லி அரசன் கண்ணில் படுகின்றாள். அரசனுக்குக் காதல் விஞ்சுகின்றது; அவளைத் தமக்கு மணம் புரிவிக்குமாறு மருத்துவரை வேண்டுகின்றார். மருத்துவர் இதற்கு முயல்கையில் குமுதவல்லி குறுக்கிட்டு திருவிலச்சினை திருமண் காப்பு முதலிய பஞ்ச சம்ஸ்காரமுடைய ஒரு வைணவர்க்கே அன்றி பிறர்க்கு வாழ்க்கைப்பட மறுக்கின்றாள். அரசனும் திருநறையூர் சென்று நறையூர் நம்பிமு ன்னர் அவற்றைப் பெற்று திருவெள்ளக்குளம் திரும்புகின்றார் திருமண ஏற்பாடுகளுடன். குமுதவல்லி மீண்டும் ஒரு நிபந்தனை போடுகின்றாள். ஓராண்டளவு நாடோறும் 1008 வைணவர்கட்கு அமுது படைத்து, அவர்தம் திருப்பாதத் தீர்த்தத்தையும், போனகம் செய்த சேஷத்தையும் உட்கொண்டாலன்றித் தான் திருமணத்திற்கு ஒருப்பட முடியாது என்று கூறுகின்றாள். அரசனும் அவள்மீது கொண்ட ஆசையின் கனத்தினால் அவ்விரதத்தைச் செய்து முடிப்பதற்கும் உடன்படுகின்றார். ஓராண்டிற்குப் பின்னர் இருவருக்கும் திருமணம் நடந்தேறுகின்றது.