பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி கடல் சூழ் (1-10-1) என்றும், இத்திருமொழி கண்ணார் கடல் போல் (4-7-1) என்றும், தொடங்கப் பெற்றிருத்தல் காண்க. பாசுரங்களின் நடைப் போக்கும் கருத்துப் போக்கும் ஒருவிதமாகவே இருத்தலையும் ஒப்பிட்டு உணர்ந்து மகிழலாம். இது காரணமாக இத்திருத்தலம் தென்திருப்பதி என்று வழங்குகின்றது போலும்." திருவெள்ளக்குளத்து எம்பெருமானை நோக்கி ஆழ்வார். வேண்டுவனவற்றைச் சிந்திக்கின்றோம். “திருவெள்ளக் குளத்தெம் பெருமானே! கடல் போன்ற திருமேனியை உடையனாயிருப்பது சம்சாரத்தில் கொதிப்படைந்து கிடக்கும் எம்போலியருடைய தாபங்களைத் தணிப்பதற்கன்றோ? அப்படியிருந்தும் அடியேனுடைய தாபங்களை இன்னமும் அகற்றாமலிருப்பது என்னோ? (1). சர்வரட்சகன் என்பது விளங்கவன்றோ நீ திருத்துழாய் மாலையைச் சாத்தியிருப்பது? நீ என்னிடரை நோக்காதொழியில் துளபமாலை அணிந்திருப்பது பயனற்றதாகுமல்லவா? (2). போவார் வருவா ரெல்லாம் கையெடுத்து வணங்கும்படியாக எளியனாக உள்ளாய், இந்திரன் பசிக் கோபத்தினால் ஏழுநாள் இடைவிடாது கல் மழை பெய்வித்தபோது கோவர்த்தன மலையைக் குடையாகக் கவித்துத் திருவாய்ப்பாடியின் இடரை நீக்கினவனன்றோ நீ? (3). நீ குவலயா பீடம் என்னும் யானையின் கொம்புகளை முறித்தாய் (4). ஒரு பிராட்டிக்காக அரியபெரிய காரியங்களைச் செய்தாய்; மலைகளைக் கொண்டு சேதுகட்டினாய் (6). சங்கல்ப மாத்திரத்தாலேயே படைப்பு அழிப்புகளைச் செய்து தலைக்கட்ட வல்லவன் நீ. ஆயினும் கையிலே கோலைக்கொண்டு கறவைகளின் பின்னே சென்று அவற்றை மேய்த்தாய் (7). பூமியைப் பிரளயம் கொண்ட காலத்தில் வராக அவதாரம் எடுத்து அதனை இடந்து எடுத்தாய். நாராயணன் என்று பேர் பெற்றுள்ளாய். சரீரத்துக்கு நன்மை செய்ய வேண்டுவது சரீரியான ஆன்மாவின் கடமையன்றோ? (8). இப்படியெல்லாம் பலருக்குப் பல்வேறு விதமாக அருள் பாலித்த நீ அடியேனுக்குச் சிறிது அருள்செய்து துன்பங்களைப் போக்கலாகாதா?’ என்று பாசுரங்கள் தோறும் பன்னிப் பன்னி வேண்டுகின்றார் ஆழ்வார். இறுதியாக, “பிராட்டியானவள் உன்னைவிட்டுப் பிரியாதிருக்கவும் நான் இழப்பது என்னோ? என்ற கருத்தை அடக்கிப் "பூவார் திருமாமகள் புல்கிய மார்பா' என்று விளிக்கின்றார். நம்மாழ்வார், “அகலகில்லேன் இறையும்” என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்று பேசினது இத்துடன் ஒத்திருப்பதைக் கண்டு மகிழ்க. 12. ஒப்பிலியப்பன் கோயிலையும், திருவண்பரிகாரத்தையும் தென்திருப்பதி என்று வழங்கும் மரபும் உண்டு 13. பெரி. திரு. 4.7:9 14. திருவாய் 6-10:10