பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13

கோலம் செய்து பெரிய வேலை அவன் சிறிய கையில் கொடுத்து, புறப்படு மகனே போர்க்களம் நோக்கி என விடை தந்து வழிவிட்ட வீரத்தாயின் திருவுருவை அழகொழுகத் தீட்டிக் காட்டும் ஒக்கூர் மாசாத்தி யாரின் உயிரோவியத்திலும்,

"மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவன் கொழுநன்
பெருநிரை விலங்கி ஆண்டுப் பட்டனனே;
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல் கைக்கொடுத்து. வெளிது விரித்து உடீஇப்,
பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே."

"யான் ஒரு மறக்குல மங்கை நல்லாள். என் வயிற்றில் பிறந்து, யான் தந்த பால் உண்டு வளர்ந்த என் மகன், மண்டமர்க்கு உடையான்.ஆனால் அந்தோ! மகளே! மண்டமர்க்கு உடைந்து விட்டான் உன் மகன்' என்ற வார்த்தை வீதிகளில் வழங்கு வதைக் கேட்கின்றனவே என் காதுகள்! யாது செய் வேன்? அவ்வுரை உண்மையாயின்,அவ் விழிந்தோனைப் பயந்து பாலூட்டி வளர்த்த யானும் இழிந்தவள் அல்லவோ? மற மாசு பட்ட என் மேனி, இனி இம் மண்மேல் உலவாது மடிந்து மறைவதாக! அவன் பால் உண்ட மார்பை வாள்கொண்டு பிளப்பேனாகுக!" என மறங் குன்றிய மகனைப் பெற்றது உண்மையாயின்,மாசு தன்னுடையதே என் உன்னும் மறக்குலத்து வந்த மாசிலாமணியின் மாண்பு பாராட்டும் காக்கை பாடினியார் நச்செள்ளையாரின் பாநலத்திலும்,

"மண்டமர்க்கு உடைந்தனனாயின், உண்டஎன்
முலை அறுத்திடுவென் யான்,எனச் சினைஇ."