பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 57
ஆளுநர் (பி.தி. சக்தி), காவலர் தலைவர் (மித்ரா) முதலிய அனைத்ததி காரிகளும் பாழியினர்க்குச் சார்பாகவே நடந்து கொள்வதுடன், அவர்களின் மறைமுக வல்லாண்மைக்கெல்லாம் தங்கள் அதிகார அமைப்புகளை அடகு வைக்கவும் துணிந்திருப்பதாகவே தெரிகிறது, இந்நிலையில் அங்குள்ள தி.மு.க. அரசும் அதன் முதல்வரும்கூட அப்பாழியினரின் உள்முகக் கவர்ச்சிகளில் மயங்கி, அவர்களுக்குப் பல்லாற்றானும் துணைபோகக் காத்துக் கிடப்பதுதான் வியப்பினும் வியப்பாகவே இருக்கின்றது. அவ்வகைத் திருவிளையாடல்களில் ஒன்றின் விளைவே, இக்கால் ஒருமுகமாய்த் திரண்டெழுந்துள்ள புதுவைக்கல்லூரி, பள்ளி மாணவர்களின் கோரிக்கையும், புரட்சிப் போராட்டமுமாகும்.
அடுத்த ஆண்டு ஆகஃச்டு 15 இல் அரவிந்தரின் நூற்றாண்டு விழா வரவிருக்கின்றது. அக்கால் புதுவையில் நடுவணரசுத்துணையுடனும் ஆளுகையுடனும் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவ மாநில அரசு முயன்று கொண்டுள்ளது. ஏற்கனவே பல துறைகளிலும் காலூன்றிய அரவிந்தப் பாழியினர், இப்பல்கலைக் கழகத்திலும் தங்கள் ஆட்சி முத்திரையை எவ்வாறேனும் பொறித்து விட விழைந்திருக்கவேண்டும். அவ்விழைவை குறிப்பாலுணர்ந்து கொண்டதுபோல் நடுவணரசினரும் அப் பல்கலைக்கழகத்திற்கு அரவிந்தர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்ட முடிவு செய்துள்ளனராம். ஏற்கனவே பொதுத்துறை பலவற்றிலும் தங்கள் வாழ்வுரிமையைப் பாழியினரிடம் பறிபோக்கிக் கொண்ட புதுவை மக்கள், கல்வித்துறையிலும் தங்களுக்குள்ள வாழ்வுரிமை வழக்கம்போல் பறிபோவதை அறிந்து வாளாவிருப்பதைக்கண்டு, தம் பொறுமையை இழந்தவராய்க் கல்லூரி மாணவர்களும், பிற பள்ளி மாணவர்களும் இணைந்து ஒரு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அதன்படி புதுவையில் தொடங்கவிருக்கும் பல்கலைக்கழகத்திற்கு அரவிந்தர் பெயரை வைக்கக்கூடாதென்றும், அது திருவள்ளுவர் பல்கலைக்கழகம் என்றோ, புதுவைப் பல்கலைக் கழகம் என்றோதான் பெயர் தாங்கல் வேண்டும் என்றும் மாணவர்கள் கோரியுள்ளனர். இக் கோரிக்கைக்காகக் கடந்த 13.10.71 இலிருந்து தொடர்ந்து கல்லூரி நிறுத்தம் செய்து போராடி வருகின்றனர்.
இவர்களின் இந்தக் கோரிக்கை மிகவும் நேர்மையான கோரிக்கையே. அரவிந்தர் பாழியின் உள்முக நிகழ்ச்சிகளில் தம் உள்ளங்களைப் பறிகொடுத்து நிற்கும் தன்மானமற்றவர் ஒரு சிலர்க்கு வேண்டுமானால் இக் கோரிக்கை மண்டையடியாகப்படலாம். பிறர்க்கு இஃதொரு தன்மானக் காப்பு முயற்சியாகவே படும். இனி, எதிர்காலக் கல்வி