52
மிருகங்கள், பறவைகளைப்பற்றி இந்நூலுள் மட்டுமே கேள்விகள் எழுப்பப்பட்டு விடை கூறப்பட்டுள்ளன.
நூறு மசலாவில் கேட்கப்படும் கேள்விகள் இஸ்லாமிய நெறி அடிப்படையிலும் பொது அறிவு அடிப்படையிலும் அமைந்துள்ளன. சில கேள்விகள் விடுகதைப் புதிர்களைப் போல அமைந்து படிப்போர்க்குக் சுவையூட்டுகின்றன. சான்றாக, மெஹர்பான், அப்பாஸை நோக்கி, ஒரு மரத்தில் பன்னிரண்டு கிளைகளும், கிளைதோறும் முப்பது இலைகளும், இலைகள் பாதிக் கருப்பும் பாதி வெளுப்புமாக உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் ஐந்தைந்து பூக்கள் இருப்பதாகவும் இதன் நுட்பக் கருத்தை விளக்கிக் கூறும் படியும் கேட்கிறாள்
"தொல் புவியில் மரமொன்றுண்டு
அதைச் சூழ்ந்த கொப்பு பன்னீரதில்
நல்லவிலை முப்பதுண்டு அதில் நற்கறுப்பு
பாதி வெள்ளை
சொல்கின்ற பூவைந்துண்டாம் இதைச்
சொல்லா விட்டால் கொல்வேனென்றாள்."
இதற்கு மறுமொழியாக அப்பாஸ்,
"சொல்லுகின்ற வருஷமொன்றே அதைச்
சூழ்ந்த கொப்பு பன்னிருமாதம்
கொல்லுமிலை முப்பது நாள அதைச்
சூழ்ந்த கறுப்போடு வெள்ளை
நல்லிரவு பகலுமது நீதான்
நாடிச் சொன்ன பூவைந்துகேள்
வல்லவனை வணங்கவதற்கு வகுத்
தானவை ஐந்தாம் என மொழிந்தான்"
எனக் கூறுகிறது. மரம் எனக்கூறியது ஓராண்டு ஆகும் பன்னிருகிளைகள் என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும்.