தனித்தமிழர் மரபு போற்றிய நாவலர் பாரதியார் 187 பழந்தமிழ்ச் செய்யுட் பரவையிலே படிந்து கிடக்கும் அருஞ் சொற்பொருள் நாடி, முத்துக் குளிப்பார் மூச்சடக்கி மூழ்குதல் போல, பலகாலும் மூழ்கி மூழ்கி வெளிப்போந்து முத்துமுத்'தான முத்தமிழ்ப் பொருளைக் கைக்கொண்டு வந்து உலகோர் கண்டு மகிழ வழங்குவது அவரது திறனாகும். நாவலர் பாரதியாரின் கருத்துரையினைக் காண்மின்: "அளவிட்டு அறிய வொண்ணா அறப் பழங்காலத்துத் தமிழ் நாட்டில் ஆரியத்தின் வேறுபட்ட சீரிய கலைச் சிறப்பும் செம் பொருட் செல்வமும் நிறைந்து சிறந்த தமிழ் வழங்கிற்று என்பது, வரலாறு அறியா இக்காலத் தமிழர் சிலர் ஐயுறினும், ஆரிய நூல்களும் பிற அயன்மொழிச் செய்யுட்களும் நற்சான்று கூறி வற்புறுத்தல் உண்மையாகும். எனவே, ஆரியர் இங்கு வருவதற்குப் பலப்பல நூற்றாண்டுகட்கு முன்னரே இந்நாட்டில் செல்வமும், புகழும் சிறக்க வாழ்ந்தவர் தமிழர்; அறனறிந்து மூத்த அறிவும் அகன்றாழ்ந்த அறிவு நூல் வளமும் நிறைந்து நின்றவர்; ஊழையும் உப்பக்கம் காணும் உலைவிலா ஊக்கமும், திரைகட லோடியும் திருவினைத் தேடித் தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்து மகிழும் ஆக்கமும் படைத்தவர். ஒழுக்கமே உயிரினும் ஓம்பற்குரியது என உணர்ந்து தம் மொழியியல் முறையிலும், வழக்கொடு செய்யுள் வகைப்படு பொருள் வரலாறுகள் அனைத்தினும் திணை வகுத்து,உயரும் வாழ்க்கையை உவந்து கொண்டவர்" அத்தகைய பழைய தமிழரின் வாழ்க்கை நெறி, ஒழுக்க நெறி, அடிப்பட்ட வழக்கு முறை, குறிக்கோள்கள், நூன்மரபு, மொழி மரபுகள் இவற்றை உள்ளவாறு இன்று நம்மவர் ஆய்ந் தறிய விரும்புவது இயல்பாகும். அவ்வாராய்ச்சிக்கு ஓரளவு உதவுவன பண்டைச் சான்றோர் செய்யுட்களேயாம். முதற்பெரு நூல் பல நீரிலும், நெருப் பிலும், போரிலும் அழிந்து போயின. எஞ்சிய சிலவும் துஞ்சிய நம்மவர் மடியும் மறப்பும் மடிய விட்டன. கபாட முண்ட கடல் கோளில் தப்பிப் பிழைத்தது தொல்காப்பியன் நூல் ஒன்றே யாகும்.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/108
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
