பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இனிமை கெடுத்த தகாத கலப்பு வடமொழியினும் தமிழ் தாழ்ந்தது என்னும் அறியாமை இருள் விலகி, வடமொழியும் தமிழும் ஒத்த நிலையின என்னும் விடிவெள்ளி தோன்றி, வடமொழியினும் தமிழ் மேலான,உலக வழக் கழிந்தொழியாச் சீரிளமைத் திறம் உடைய செம்மொழி என்னும் இளஞாயிற்றின் ஒளி இந்த நூற்றாண்டின் தொடக்கத் தில் பரவத் தொடங்கியது. அதற்குத் துணைநின்ற தமிழ் அறிஞர்களுள் குறிப்பிடத் தகுந்த பெருமைக்குரியவர், பரிதி மாற்கலைஞர் என்னும் தமிழ்ப் பெயர் பூண்ட வி.கோ.சூரிய நாராயண சாத்திரியார் ஆவார்.