பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தமிழ்க்கடல் அலை ஓசை தெலிங்கானாவிலும் காணலாகும் பழைய கல்வெட்டு எதுவும், அதை ஆள மேற்கொண்ட எழுத்துகள் எம்மொழி எழுத்து களேயாயிலும், கன்னட மொழியிலோ தெலுங்கு மொழியிலோ எழுதப்பட்டிலது என்பதிலிருந்து தமிழ் இலக்கிய வளர்ச்சியின் முதுமையும் தனித்தியங்கும் உரிமையும் பேரளவு ஐயமற நிலை நாட்டப்பெறும் என அறிக. மேலும் பேராசிரியர் வில்சன் என்பார், "தென்னிந்திய மொழிகள் சமக்கிரத மொழியைப் பார்த்துப் பின்பற்றி வளர்க்கப் பெறுகின்றன. திராவிட மொழிகளில் உள்ள தலையாய இலக்கியச் செல்வங்கள் அனைத்தும், ஒன்று வடமொழி மூல இலக்கியங்களின் மொழி பெயர்ப்பாகும்; அல்லது அவற்றின் பொழிப்புரைகளாகும். அவை அம் மூல இலக்கியங்களின் சொற்றொடர் அமைப்பு முறை களையும் அவ்வாறே கடன் வாங்கியுள்ளன," என்று கூறி யிருந்தார். அக் கருத்தை மறுத்து டாக்டர் கால்டுவெல் அவர்கள், "தமிழைப் பொறுத்த வரையில் அவர் கூற்று முழுதும் பொருந்துவதன்று. தமிழ்மொழியின் தலையாய இலக்கியங் களாம் என்று எல்லோராலும் ஒரு சேர ஒப்புக்கொள்ளப்பட்ட திருக்குறளும், சிந்தாமணியும் அமைப்பிலும், ஆக்கிய முறை யிலும் அறவே சமக்கிரதத் தொடர்பற்றனவாம்; முழுக்க முழுக்க முதல்நூல் தன்மை வாய்ந்தனவாம்" என்று கூறியுள்ளார். அக்காலத்தில் - சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை யும், பத்துப்பாட்டும் தொல்காப்பிய இலக்கணமும், சிலம்பும் மேகலையும் அச்சேற்றப்பட்டு வெளியிடப்படவில்லை எனினும் இம்முடிவினை அவர் கொண்டது கருதத்தகும். தமிழ்ப் புலவர்கள் இராமாயண, பாரதங்களை உள்ளது உள்ளவாறே மொழி பெயர்க்கவில்லையெனினும், வடமொழி யாளர் போக்கைப் பின்பற்றியே இயற்றி உள்ளனர் என்பது உண்மையே. ஆயினும் தமிழர்கள் தங்கள் கம்பன் ஆக்கிய தமிழ் இராமாயணம், வான்மீகி இராமாயணத்தைக் காட்டிலும் நனிமிகச் சிறந்ததாம் என்று பெருமை பாராட்டிக் கொள்ளவும் தவறுவதில்லை, இவ்வாறு தமிழ் இலக்கியங்கள் மூலநூல் தன்மையும் தனிச் சிறப்புகளும் கொண்டு தமிழுக்குப் பெருமை தருபவையே என விளக்கினார்.