பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகன்பால்கு சிந்தை கவர்ந்த தமிழ தமிழிலே இலங்கும் 'கைவல்ய நவநீதம்', 'சிவஞான சித்தியார்' முதலான சில தத்துவ நூல்களைச் செருமானியிலும் ஆங்கிலத் திலும் மொழி பெயர்த்தார். அதனோடு எல்லோரும் பயன் பெறும் தனிச் சிறப்புடைய திருக்குறளை அதன் அருமை பெருமைகளை உணர்ந்து, இலத்தீன், செருமன் ஆகிய இரு மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார். அவரது இந்த அரிய முயற்சியின் பயனாகத் தமிழர்கள் வழிவழி வளர்ந்த தொன்மை மிக்க தமிழின் பயனாகப் பெற்றிருக்கும் அறிவு நுட்பம், தெளிவு, திட்பம், செப்பம் ஆகியவற்றையும் பண்பு நலன், சால்பு, ஒழுக்கம் முதலியவற்றையும் மேல் நாட்டவர் அறிந்து மதித்திட வழி பிறந்தது. இவ்வாறு மேலை நாட்டவருள் செருமானிய மொழிப் புலவோர் தொடங்கிய தமிழ்ப்பணி இன்றும் தொடர்கிறது, வளர்கிறது. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே "தத்துவ போதகர்' எனத் தமிழருக்கு விளங்கும் பெயர் பூண்ட ராபர்ட் தி நொபிலி' என்னும் இத்தாலிய நாட்டுப் பெரியார் தமிழகத்திற்கு வந்துள்ளார். அவர் தமிழும் வடமொழியும் பயின்று கிறித்தவ சமய விளக்கம் செய்யும் உரைநடை நூல்கள் பல இயற்றியதோடு தமிழ் -- போர்ச்சுகீசிய அகராதி ஒன்றும் தொகுத்துள்ளார். இவரது உரைநடை வடசொல் விரவிய கலப்புமொழி நடையே எனினும், அத்துறையில் அது முதன் முயற்சி என்பது கருதற்பாலது. இவர் தம்மை, இத்தாலிய நாட்டு அந்தணர் எனக் கூறிக் கொண்டதோடு தமிழ்மக்க ளுடன் கலந்து உறைந்து தமிழகத்து வழக்கங்களைத் தழுவி, தமிழகத்துத் துறவிகளைப் போன்று பூங்காவி ஆடையும், புலித் தோல் இருக்கையும், பொற் பூணூலும் கடுக்கனும், சந்தனப் பொட்டும் கொண்டு காட்சியளித்தார் என்றும் அறிகிறோம். தமிழ்மொழியில் தோன்றிய பற்று தமிழர் விரும்பும் தோற்றத்தையே அவரை மேற்கொள்ளச் செய்தது போலும்!