பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போப் ஐயர் போற்றிய தமிழ் 59; ஆங்கிலத்திற்கு எவ்வாறு உரிமையாமோ அவ்வாறே தமிழுக்கே. உரியனவாகத் தமிழரின் தெளிந்த சிந்தனையிலிருந்து பிறந்த மூலத் தமிழ் நூல்களைக் கொண்டே இவ்வாறு கூறுகிறேன். சமக்கிரதத்திற்கு அப்பாற்பட்டுத் தனித்துத் தோன்றியது. மட்டுமன்றி அதன் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதும் பரந்து விரிந்த தன்மையும் உள்ளங் கவரும் திறனுமுடைய தமிழ் இலக்கியத்தைத தமிழர்கள் பெற்றுள்ளனர்." தமிழ்ப் புலவோர் பிராமணீயத்தையும், பிராமணர்களையும் விரும்பாததோடு வடமொழி இலக்கியந் தழுவிய நூல்கள் இயற்றுவதை விட, அவற்றோடு போட்டியிடக்கூடிய தனிச் சிறப்புடைய தமிழ் இலக்கியத்தைப் படைப்பதில் ஈடுபட்டுக் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டுள்ளனர். தமிழ் இலக்கியங் களில் பலவிடத்தும் சமக்கிரத மொழிவழிக்கும் தென்னகத்துத் தமிழ்வழிச் சிந்தனைக்கும் இடையே தோன்றிய மாறுபாட்டின் சுவடுகளையே காண்கின்றோம். அம்மட்டோ! தமிழர்கள் தமிழ் கற்பதைத் தாழ்வாக எண்ணி, வடமொழி போற்றியும், ஆங்கிலம் கற்றும் வாழ்வதை உயர்வாகக் கொண்டு, வழி தவறித் தடுமாறி நின்ற காலத்தில், அவர்தம் உள்ளத்தில் தமிழ்மொழியின் மாட்சி, பசுமரத்து ஆணி போன்று பதிய வேண்டும் என்று எண்ணித்தான் போலும், டாக்டர் போப் அவர்கள், ஒரு நண்பர், அவரது கடைசி விருப்பம் யாது என வினவியபோது, 'என் கல்லறையின்மீது நான் ஒரு தமிழ் மாணவன் என்று செதுக்கி வையுங்கள்' என்று கேட்டுக் கொண்டுள்ளார் ! மேல்நாட்டவரான போப் அவர்களின், உயிருடன் ஒட்டி யிருந்த வேட்கை, குருதியுடன் கலந்த விருப்பம், அவரை 'ஒரு தமிழ் மாணவர்' என்று உலகம் உணர் வேண்டும் என்பதே எனில், அவரிடத்து அப் பற்றைத் தோற்றுவித்த தமிழ் மாட்சிதான் எத்தகையது? தமிழினது மாண்பைத் தமிழரும் உணரச் செய்த போப் அல்லரோ, இறந்தும் இறவாது வாழும் தமிழ் மாணவராக இன்றும் தமிழ் உள்ளங்களில் எல்லாம் ஒளிர்கின்றார். வாழ்க போப் ஐயர் தந்த உணர்வு!