162 தமிழ்க்கடல் அலை ஓசை கடாட்சத்தாலே கன்னிகாதானம் செய்வதாக நிச்சயித்து,
- புரோகிதர் வடமொழி மந்திரம் ஓத-முப்பத்து முக்கோடி தேவர்,
கின்னரர் கிம்புருடர் சாட்சியாக, ஓமகுண்டம் வளர்த்து, அக்கினி வலம்வந்து கல்யாண வைபவம் நடத்தி - சாந்தி முகூர்த்தமும் சாஸ்திர சம்பிரதாயத்துடன் நடப்பது வழக்கமாகி வந்தது அந் நாட்களில், பிறந்த புத்திர புத்திரிகட்கு, புண்யா ஜனனம் செய்வதும் சிறுவர்கட்கு 'அரிநமோத்துசிந்தம்' என அரிச்சுவடி தொடங்கு வதும் இறந்தவர்கட்குத் திதிவைத்துத் திவசம் கொடுப்பதும் ஆலய வழிபாட்டு முறையிலே அருச்சனை நிகழ்வதும் எல்லாம் தேவ பாஷையிலே தான்! இவற்றால் மேலவர் மொழியாக உயர்ந்து தோன்றிய சமக்கிரதத்தின் சொற்கள் பலப்பல, தமிழர்களின் பேச்சிலும் எழுத்திலும் ஊடுருவிக் கலந்து அவற்றிற்குமுன் வழங்கப்பட்ட பல நூறு தமிழ்ச் சொற்களை நீக்கிவைத்து ஆர்ப்பரிக்கலாயின. தமிழகத்து ஊரும் தமிழர்களின் பேரும் முதலில் வழங்கப்பட்ட முறையே மாற்றங் கொண்டிருந்தன. திருமறைக்காடு என்னும் ஊர் வேதாரண்யம் ஆயிற்று. மயிலாடுதுறை -மயூரம் எனவும். பழமலை- விருத்தாசலம் எனவும், திருவரங்கம்—ஸ்ரீரங்கம் எனவும், திருவில்லிபுத்தூர்-- ஸ்ரீவில்லிபுத்தூர் எனவும், குடந்தை- கும்பகோணம் எனவும் மாறிவழங்கின. ஓரிரு நூற்றாண்டுக்கு முன்னர் முருகன், நல்லான், சிவப்பன், மணியன், முத்து, கண்ணன், வள்ளி, பச்சை, மயில், பொன்னம்மை முதலான பெயர்பூணும் மக்கள் வடமொழிச் சார்பினால் ராமன், ரகுபதி, ஈஸ்வரன், ஸ்ரீதரன், இலட்சுமி, சரஸ்வதி, விஜயா, பங்கஜம் எனப் பெயரிடுதலை நாகரிகமாகக் கருதலாயினர். இவையேயன்றி- எளிதாகப் பொருள் விளங்கும் இனிய தமிழ்ச் சொற்கள் பலவும் சொற்றொடர்கள் சிலவும் நாளடைவில் நிலையிழந்து வடசொற்களுக்கும் சொற்றொடர்களுக்கும் இட மளித்து மறைந்தன.