தமிழ்த்தாய்
“கண்ணுதற் பெருங்கட வுளுங் கழகமோடமர்ந்து
பண்ணுறத்தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச்சில இலக்கணவரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும்படுமோ”
- திருவிளையாடற்புராணம்.
தமிழராகிய நாம் நாடோறும் பேசிவருந் தாய்மொழி தமிழேயாகும். நாம் சிறு குழவியாய் இருந்தபோது நம் அன்னையின் தீம்பாலைப் பருகிப் பசி. தீர்ந்து அவள் மடியிற்கிடக்க, அவள் நம்மைக் கொஞ்சி முத்தம்வைத்து நம்மைப் பாராட்டிப் பேசியது தமிழ் மொழியிலன்றோ? சிறு குழந்தையாய் இருந்த அந்தக் காலந்தொட்டு மறுபடியும் நாம் இந்த உலகைவிட்டு அகன்றுபோகும் வரையில் நம் தாய் தந்தையரோடும் உடன்பிறந்தவரோடும் மனைவி மக்களோடும் நம் நாட்டில் உள்ளவரோடும் நாம் ஊடாடி உறவாடிப் பேசுவதும் நமதருமைத் தமிழ் மொழியிலன்றோ? இங்ஙனம் நமது உயிரோடும் உடம்போடுங்கலந்து நமதறிவைத் தன் வண்ணம் ஆக்கிக், கனாக்காணுங் காலத்துங் கனவுலகில் உள்ளவரொடு நாம் பேசுகையில் அப்பேச்சோடும் உடன்வந்து நிற்பதாய்க் கிளர்ந்து விளங்குவது நமது இனிய செந்தமிழ் மொழியேயாய் இருத்தலின், நமதுயிர் இவ்வுலக வாழ்வைத் துறந்து மறுமையுலகிற் சென்று உலவும்போதும் நமக்கு உற்ற துணையாய் நம்மோடு உடன்வந்து நிற்பது தமிழ்மொழியே யாகுமென்பது தெளிவாகப் பெறப்படுகின்றதன்றோ?இவ்வாறு இம்மைமறுமை யிரண்டிலும் நமது உயிர்க்கு உற்ற துணையாய் இருந்து உதவுவது தமிழ்மொழி ஒன்றுமே யாகையால், நடுவே