பக்கம்:தமிழ்த்தாய்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவுரைக்கொத்து

அளவிறந்த நன்மைகளையெல்லாம் விளைவித்து வருகின்றார்கள். நம்மவர்களோ தமக்குரிய செந்தமிழ் மொழியைச் சிறிதுங் கல்லாமலுஞ், சிறிது கற்றாலுந் தமிழ் நூற்பயிற்சி நன்கு நிரம்பாமலும்,வயிற்றுப் பிழைப்பிற்குறிய ஆங்கிலம் முதலான அயல்மொழிகளையே மிகுந்த பொருட்செலவுசெய்து, பல ஆண்டுகள் அல்லும்பகலும் உழைத்துக் கற்றுக் கொள்கின்றார்கள். கற்றும் என்! நம் தமிழ்நாட்டிற்குறிய தென்னங்கன்றைப் பெயர்த்துக் கொண்டுபோய்ப் பனிமிகுந்த ஆங்கில நாட்டில் வைத்தால் அஃது அங்கே வளராமல் அழிந்துபோவதுபோல, நமது செந்தமிழைவிட்டு மற்றமொழிகளையே தம் காலமெல்லாங் கற்ற அவர் அதனால் வலிவிழந்து மெலிந்து விரைவில் உயிர் துறக்கின்றனர்! ஐயோ! வயிற்றுப் பிழைப்புக்கென்றே முழுதுங்கற்ற மற்றமொழி அவரது பிழைப்புக்கே இடையூறு விளைத்து வருதலை நம்மவர் அறியாமல் வரவரத் தமது வாழ்வில் அருகிப்போவது நினைக்குந்தோறும் நமதுள்ளத்தை நீராய் உருக்குகின்றது! இந்நிலைமையைச் சிறிதாயினுங் கருதிப்பார்ப்பவர்கள் நமது தமிழ் மொழிப்பயிற்சி நம் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத அருமருந்தா மென்பதை உணராமற் போவரோ.

இது மட்டுமோ, இத்தென்னாட்டின்கண் நமது தமிழ்மொழியானது இருநூற்று மூன்று நூறாயிரத்துத் தொண்ணூற்றையாயிரம் பெயர்களாற் பேசப்பட்டு வருகின்றது. இத்தென்னாட்டில் மட்டுமேயன்றி, இலங்கையிலும் பர்மாவிலும் சிங்கப்பூர் பினாங்கு முதலான மலாய் நாடுகளிலும், மோரீசு தென்னாப்பிரிக்கா முதலான இடங்களிலும் நமது தமிழ்மொழியைப் பேசுவார் பெருந்தொகையாய் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்த்தாய்.pdf/5&oldid=1722113" இலிருந்து மீள்விக்கப்பட்டது