பக்கம்:தமிழ்த்தாய்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த்தாய்

இருக்கினார்கள். இவ்வளவு பெருந்தொகையாய் உள்ள தமிழ்மக்களெல்லாரும் அறிவிலும் நாகரிகத்திலும் உயர்ந்து விளங்கவேண்டுமாயின், அவர்கள் தமக்குத் தெரிந்துள்ள தமிழ்மொழியின் வழியாகவே அங்ஙனம் ஆகல் வேண்டும். மிகுந்த பொருட்செலவுங் காலக்கழிவும் வருத்தமுமின்றி அவர்களைக் கல்வியில் வல்லவராக்குதற்கு இசைவான இந்த எளிய முறையை விடுத்து, அவர்கட்குப் புதுமையாக ஆங்கிலம் ஆரியம் முதலான சொற்களைக் கற்பித்து அவர்களை உயர்த்தல் வேண்டுமென்று நினைப்பவர் ஒரு காலத்துந் தம்மெண்ணத்தை நிறைவேற்ற மாட்டார். ஆதலால். நம் தமிழ் மக்களை உண்மையாகவே முன்னேற்ற வேண்டுமென்னும் எண்ணம் உடையவர்கள், அவர்களுக்குரிய தமிழ்க் கல்வியின் வாயிலாகவே அதனைச் செய்யக் கடமைப்பட்டிருக்கின்றார்கள். மற்றமொழிகளில் நாடோறும் புதியனவாய் வெளிவரும் அரும்பொருள் நூல்களையெல்லாந் தமிழில் மொழிபெயர்ப்பித்துக் கற்பிக்கத் தலைப்பட்டால், இப்போது பதினைந்து ஆண்டுகளுக்குமேல் ஆங்கில மொழியை மிக வருந்திக்கற்று ஒருவர் தெரிந்து கொள்ளும் பொருள்களெல்லாம், நமது செந்தமிழ் மொழியில ஏழெட்டு ஆண்டுகளில் இன்னுஞ் செவ்வையாகக் கற்றுத்தேறலாம். ஆங்கிலம் ஆரியம் முதலிய மொழிகளில் அவர் எவ்வளவுதான் கற்றுத்தேறினாலும். தாம் அம்மொழிகளில் அறிந்த பொருள்களைத் தமிழ்மக்கள் எல்லார்க்கும் புலப்படும்படி எடுத்துச்சொல்லிப் பயன்படுத்தல் இயலாது; தமிழ் கற்றவரோ தாம் அறிந்தவைகளைத் தமிழ்மக்களெவர்க்கும் நன்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லிப் பெரிதும் பயன்படுபவர். இதனால் தமிழ்நாட்டவர் தமிழ்கற்பதொன்றே தமக்கும் பிறர்க்கும் பயன்படுவதற்கு ஏதுவாம் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்த்தாய்.pdf/6&oldid=1722122" இலிருந்து மீள்விக்கப்பட்டது