பக்கம்:தமிழ்த்தாய்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவுரைக்கொத்து


இனி, ஏழெட்டு நூற்றாண்டுகளாய்ப் புதிது முளைத்தெழுந்து இப்போது ஆங்காங்கு வழங்கி வரும் பல வேறு மொழிகளையும் போல்வதன்று நமது தமிழ்மொழி; இஃது இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று எவராலுங் கட்டுரைத்துச் சொல்லமுடியாத பழமையுடையதாய், இத்தனை காலமாகியுந் தனது இளமை சிறிதுங் குன்றாதாய் உலாவி வருகின்றது. தமிழைப் போலவே பழமையுடையனவென்று சொல்லத்தக்க ஆரியம் கிரேக்கு இலத்தீன் ஈபுரு அராபி சீனம் முதலான பல தேய மொழிகளெல்லாம் இப்போது உலகவழக்கில் இன்றி இறந்தொழிய, நம் செந்தமிழ் மொழி ஒன்றுமே எல்லாம் வல்ல இறைவனைப்போல் என்றும் இறவாத இளமைத்தன்மை வாய்ந்து இலங்குகின்றது. இவ்வுண்மையை மனோன்மணீயத்தில்,


“பல்லுலகும் பலவுயிரும் படைத்தளித்துத் துடைக்
கினும் ஓர், எல்லையறு பரம்பொருள் முன்னிருந்த
படியிருப்பதுபோற், கன்னடமுங் களிதெலுங்குங்
கவின்மலையாளமுந் துளுவும். உன்னுதரத் துதித்
தெழுந்தே ஒன்று பல ஆயிடினும், ஆரியம்
போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையா
நின், சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து
வாழ்த்துதுமே”

என்று வந்த தமிழ்த்தாய் வணக்கச்செய்யுளிலுங் கண்டுகொள்க.

பழமையில் இதனோடு ஒத்த ஆரியம் முதலான மொழிகளெல்லாம் இறந்தொழியவும், இதுமட்டும் இன்னும் இளமையொடு விளங்குவது எதனால் என்றால்; தமிழ் அல்லாத மற்றமொழிகளில் எல்லாம் மக்கள் இயற்கைக்கு மாறான உரத்த ஓசைகளும் பொருந்தா இலக்கணமுடிபுகளுங் காணப்படுதலால் அவை வழங்குவதற்கு எளியனவாய் இல்லா-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்த்தாய்.pdf/7&oldid=1722161" இலிருந்து மீள்விக்கப்பட்டது