அ
அறிவுரைக்கொத்து
-கிய திருக்குறள், நாலடியார் போன்ற அரும்பெரு நூல்களை நம் செந்தமிழ் மொழியன்றி வேறு எந்த மொழியேனும் உடையதாமோ? சிலப்பதிகாரம், மணி மேகலை என்னும் பெரும் பழந்தமிழ்க் காப்பியங்களோடு ஒத்தவை எம்மொழியிலேனும் உளவோ? உலகவியற்கை பிறழாது பாடிய பத்துப்பாட்டு, கலித்தொகை முதலான பழைய தமிழ்ப் பாட்டுகளுக்கு நிகரானவை வேறெந்த மொழியிலேனும் எடுத்துக்காட்டல் இயலுமோ? திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவை,தேவாரம், பெரியபுராணம் என்னுந் தெய்வத் தமிழ் நூல்கள். கன்னெஞ்சமுங் கரைந்துருகி எத்திறத்தவரும் இறைவன் அருட்பெருக்கில் அமிழ்ந்தி இன்புருவினராய் நிற்குமாறு செய்தல்போல, வேறு எந்த மொழியில் உள்ள எந்நூலேனுஞ்செய்தல் கண்டதுண்டோ? மக்கள் முடிவாய்த் தெரியவேண்டும் மெய்ப்பொருள்களை யெல்லாந் தெளித்துக்கூறி முடிவுகட்டிய சிவஞானபோதம், சிவ ஞானசித்தி போன்ற மெய்ந்நூல்களும், அவற்றிற்கு மெய்யுரை விரித்த சிவஞான முனிவர் நுண்ணுரை போன்ற உரைநூல்களுந் தமிழிலன்றி வேரெந்த மொழியிலேனுங் காணப்படுவதுண்டோ? இந்நூற் பொருள்களென்னுந் தீம்பாலை நமதுயிரெல்லாந் தித்திக்கக் குழைத்தூட்டும் நம் தமிழ்த்தாயை மறவாது பேணும் பெரும்பேற்றை நம் தமிழ்மக்கள் எல்லாம் பெற்றுச் சிறந்திடுவாராக!