பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. பிற்காலச் சோழர் வரலாறு

சோழர் எழுச்சி

சங்ககாலத்தில் சீரும் சிறப்பும் கொண்டு விளங்கிய சோழர்கள் பிற்காலத்தில் பல்லவர்க்குக் கீழ் குறுநில மன்னர்களாகவும் அதிகாரிகளாகவும் வாழ நேரிட்டது. பல்லவர் காலத்தில் இவ்வாறு அழிந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலே மறுபடியும் தம் பண்டைச் சிறப்பை நிலை நாட்டக் கிளர்ந்து எழலானார்கள். பிற்காலச் சோழப்பேரரசை நிறுவியவன் விசயாலயன் என்பவனாவான். பிற்காலச் சோழர்க்குத் தலைநகர் தஞ்சை மாநகராகும். விசயாலயன் காலம் கி. பி. 850-71 என்பதாகும். பல்லவர் வீழ்ச்சி, தலைதூக்கும் சோழர்க்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தது. கி. பி. 860-இல் முத்தரையரிடமிருந்தோ , பல்லவரிடமிருந்தோ விசயாலயன் தஞ்சையைக் கவர்ந்தான். முத்தரையர் என்பவர் பாண்டியர்க்கு நண்பராவர். இந்நிலையில் பல்லவர்-பாண்டியர் போர் அடிக்கடி நிகழ்ந்து வந்தது. இதனால் சோழ மன்னனாகிய விசயாலயனுக்கு நன்மையே விளைந்தது. மேலும் சோழப் பேரரசை ஏற்படுத்தவும் இப்போர் பயன்பட்டது. 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே'. கி. பி. 880-இல் திருப்புறம்பியம் என்னும் இடத்தில் பல்லவ மன்னன் அபராசிதவர்மனுக்கும் பாண்டியன் வரகுணனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இப்போரில் பாண்டியன் தோற்றாலும், அதனால் நன்மை அடைந்தது பல்லவன் அல்ல; சோழனே. பாண்டியன் வீழ்ச்சி சோழர் வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடையை நீக்கியது.