பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தமிழ் நாடும் மொழியும்


“மதுரை கொண்ட சோழன்" எனப் பெயர் கொண்டான். தோற்ற இராசசிம்மன் வாளா இருக்கவில்லை. ஈழ நாட்டுக்கு ஓடினான். ஈழமன்னனைக் கெஞ்சினான். ஈழநாட்டுப்படையோடு சோழனைத் தாக்கினான். போர் வெள்ளூரில் நடைபெற்றது. போரில் பாண்டியன் தோற்றோடினான். இது நடந்த காலம் கி. பி. 915. ஆண்டுகள் ஐந்தோடின. பராந்தகன் பாண்டியனை மதுரையை விட்டே விரட்டினான். அவன் ஈழ நாட்டில் அடைக்கலம் புகுந்தான். பாண்டியன் ஈழ மன்னனிடம் விட்டுச் சென்ற முடியையும் இந்திரன் ஆரத்தையும் பெறச் சோழன் எவ்வளவோ முயன்றும் இறுதியில் தோல்வியுற்றான். இச் செய்தியை மகாவமிசமும் இரண்டாம் பிருதிவி பதியின் செப்பேடுகளும் எடுத்தியம்புகின்றன. கங்க அரசனான பிருதிவிபதி என்பான் சோழனுக்கு அடிபணிந்தான். இராசேந்திரன் விடுத்த திருவாலங்காட்டுப் பட்டயங்கள் மூலம் பராந்தகன் தில்லைக் கூத்தன் கோவிற்குப் பொற்கூரை அமைத்தான் என்பதும், அதனால் 'கோவில் பொன் வேய்ந்த தேவன்' என்று அழைக்கப்பட்டான் என்பதும் தெரிய வருகின்றது. உத்தரமேரூர்க் கல்வெட்டு மூலம் சோழப் பேரரசு, பேரரசாகத் திகழ அடிகோலியவனும், சிறந்த ஆட்சிவன்மையுடையவனும் பராந்தகனே என அறியலாம். இவன் காலத்தில் சோழப்பேரரசு வடக்கே நெல்லூர் முதல் தெற்கே குமரிமுனை வரை பரவி இருந்தது. என்றாலும் பராந்தகன் தன் இறுதிநாளில் மகிழ்ச்சியோடும் மனநிம்மதியோடும் வாழ முடியவில்லை. இராட்டிரகூட மன்னனை மூன்றாம் கிருட்டிணன் தொண்டை மண்டலத்தின் மீது படை எடுத்தான். அக்காலத்தில் சோழப்பேரரசின் இளவரசனாக இருந்தவன் இராசாதித்தன் ஆவான். தக்கோலம் என்ற இடத்தில் இராசாதித்தனுக்கும் மூன்றாம் கிருட்டிணனுக்கும் இடையே போர் நடந்தது. இது நடந்த ஆண்டு கி. பி. 949. போரிலே சோழன் கொல்லப்பட்டான்.