பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தமிழ் நாடும் மொழியும்


ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனின் தலையைப் பந்தாடினான். ஆதித்த கரிகாலன் தந்தைக்குப்பின் கி. பி. 973 இல் அரியணை ஏறி 980வரை ஆண்டான் என்பது சிலர் கருத்து. சிலர் உத்தம சோழனால் ஆதித்த கரிகாலன் கொலையுண்டான் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மையில் நடந்தது அதுவல்ல. ஆதித்த கரிகாலன் கொலையுண்டான். யாரால்? சோழ நாட்டு அரசியல் அதிகாரிகள் இருவர், பாண்டிய நாட்டு அரசியல் அதிகாரி ஒருவர் ஆகிய மூவரும் சேர்ந்து சதிசெய்து ஆதித்த கரிகாலனைக் கொன்றார்கள். இவர்கள் பிற்காலத்தில் இராசராசனால் தண்டிக்கப்பட்டனர். இச்செய்தியைச் சிதம்பரம் தாலுகாவிலுள்ள காட்டுமன்னார் கோவிலிலுள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

ஆதித்த கரிகாலன் இறந்த பின்பு கண்டராதித்தனின் மகனான உத்தமசோழன் அரசேற்று கி. பி. 985 வரை ஆண் டான். உத்தம சோழன் காலத்தில் ஆதித்த கரிகாலனின் உடன்பிறந்தவனாகிய இராசராசன் இளவரசனாக இருந்தான். சோழப் பேரரசில் வீணாகக் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படாமல் இருக்க இராசராசன் உத்தம சோழனையே அரசனாக இருக்குமாறு வேண்டிக் கொண்டான். சோழப் பேரரசர்களுள் தங்க நாணயங்களை முதன் முதல் வெளியிட்ட பெருமை உத்தம சோழனையே சாரும்.

முதல் இராசராசன் (985-1014)

சோழப் பேரரசுக்கு அடிப்படைக்கல் நாட்டியவன் விசயாலயன். கட்டிடத்தை எழுப்பியவன் பராந்தகன். அந்தக் கட்டிடத்தின் பெருமையை உலகுக்குத் தெரிவித்தவர்களுள் தலை சிறந்தவன் இராசராசன். இராசராசன் காலத்தில் சோழப் பேரரசு பேரும் சீரும் பெற்றது. சோழ நாட்டுக் கொடி யாங்கணும் பறந்தது. அவன் படை என்றாலே அகில