பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

101



முதற் குலோத்துங்கனின் தாய் அம்மங்கைதேவி. இவள் கங்கைகொண்ட சோழனின் மகளாவாள். குலோத்துங்கனின் தந்தை வேங்கியை ஆண்ட இராசராசன் - இவன் குந்தவையின் மகன். குந்தவை முதல் இராசராசனின் மகள். எனவே முதற்குலோத்துங்கன் சாளுக்கியன் என்பதைவிடச் சோழன் என்னலே பொருத்தமுடைத்தாகும்.

முதற் குலோத்துங்கன் சோழநாட்டை கி. பி. 1070 லிருந்து 1120 வரை, அஃதாவது ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் ஆண்டுள்ளான். இவன் பட்டம் பெற்ற காலத்தில் சோழப் பேரரசு பல திசைகளிலிருந்தும் வருகின்ற படையெடுப்புக்களால் பெரிதும் அல்லலுற்றது. வடக்கே காலச்சூரிகள் கர்னன் தலைமையில் வேங்கி மீது படையெடுத்தனர். தெற்கே கி. பி. 1075-இல் ஈழம் தனியரசு முழக்கம் செய்தது. பாண்டியரும் சேரரும் மீண்டும் தலைதூக்கினர். இத்தகைய இக்கட்டான நிலையில் கடல் கடந்த சோழர் குடியேற்ற நாடுகள் சோழமன்னனால் நேரடியாகக் கவனிக்கப் படமுடியவில்லை. குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் ஓய்சால மன்னனான விட்டுணுவர்த்தனன் கங்க பாடியைக் கவர்ந்து தாலக்காடு கொண்டான் எனப் பெயர் - சூடிக்கொண்டான். சோழப் பேரரசைக் காப்பாற்ற குலோத்துங்கன் இயன்றவரை முயன்றான். இவன் சிங்களவரோடு மண உறவுகொண்டான்; நாகைபட்டினத்திலே புத்தவிகாரம் அமைப்பதற்குக் கடாரத்தரசனோடு ஒத்துழைத்தான். தனது தளபதியாகிய நரலோக வீரன் மூலம் சேர - பாண்டியரின் எழுச்சியை அடக்கினான். நாட்டின் வட எல்லையில் அமைதியை ஏற்படுத்தக் கலிங்க நாட்டின் மீது இரு தடவை படையெடுத்தான். அவற்றிலே முதற்படையெடுப்பில், அஃதாவது கி. பி. 1106-இல் வடகலிங்கம் கைக்கு வந்தது. இரண்டாவது படையெடுப்பில் அஃதாவது கி. பி. 1112-இல்