பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தமிழ் நாடும் மொழியும்


உத்தரமேரூர், உக்கல் என்ற இரு பேரூர்களிலும் காணப்படும் கல்வெட்டுக்களாகும்.

சோழ நாடு

சோழப் பெருநாடு மண்டலங்களாகவும், மண்டலங்கள் வள நாடுகளாகவும், வள நாடுகள் நாடுகளாகவும், நாடுகள் கூற்றங்களாகவும், கூற்றங்கள் குறும்புகளாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. அக்கால மண்டலங்கள் இக்கால மாநிலங்கள் (Provinces); வள நாடுகள் இக்காலப் பெருமாவட்டங்கள் (Division); நாடுகள் - மாவட்டங்கள்; கூற்றம் - வட்டம்; குறும்புகள் - பிர்க்கா என நாம் ஒப்பிடலாம். சோழ நாடு ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த மண் டலங்கள் ஒரு காலத்தில் தனி நாடுகளாக விளங்கிப் பின் சோழ மன்னர்களால் வெல்லப்பட்டு சோழ நாட்டோடு இணைக்கப்பட்டனவாகும். இந்த மண்டலங்கள் சோழ நாட்டோடு சேர்க்கப்பட்ட காலத்தில் அந்தந்த மண்டலத்தின் முன்னைய அரசர்களாலும், அரச பரம்பரையினராலும் ஆளப்பட்டுவந்தன. ஆனால் பிற்காலத்தில், அஃதாவது இராசாதிராசன் காலத்தில் சோழமன்னர் பரம்பரையினரே அந்த மண்டல அதிகாரிகளாக ஏற்படுத்தப்பட்டனர். இவ்வித மாற்றத்திற்குக் காரணம், அந்த எல்லைப்புற மண்டலத்தின் பழைய மன்னர்கள் அடிக்கடி தனியரசு பெறக் கிளர்ச்சி செய்தமையேயாகும். கருணாகரத் தொண்டைமான் போன்ற பல்லவக் குறுநில மன்னர்கள் மண்டலத் தலைவர்களாக ஏற்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் சோழ மன்னர்களின் பெயர்களே இடப்பட்டன. மண்டல அதிகாரிகளுக்கு உதவியாகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவில் அறிவும் அனுபவமும் திறமையுமிக்க அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர்.