பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. தமிழ் நாடு
1. தமிழ் நாட்டு வரலாற்றுக் கண்ணாடி


தமிழகத்தின் சிறப்பு

உலக வரலாற்றிலேயே தனக்கெனத் தனியிடம் கொண்டுள்ள நாடுகள் சில. அந்தச் சிலவற்றிலே சிறந்த வரலாற்றைக் கொண்ட நாடு தமிழ் நாடு. இக்காலச் சென்னை மாநிலம், மைசூர், ஆந்திர நாடுகளின் ஒரு பகுதி, கேரளம் ஆகியன சேர்ந்த பகுதியே பழங்காலத் தமிழகமாகும். தமிழகத்தின் வட எல்லை வேங்கடம்; ஏனைய முப்புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தன.

இந்திய வரலாற்றிலேயே தமிழகத்திற்குரிய சிறப்பினைக் குறைக்க எவராலும் முடியாது. தமிழகம் பக்தி வெள்ளத்தில் மூழ்கும் ஒரு நாடு. இந்தியச் சமயத்தின் வளர்ச்சிக்குத் தமிழகத்தைத் தவிர வேறு எப்பகுதியும் அவ்வளவாக உதவி செய்ததில்லை. ஈராயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் நாடு பல்லாயிரக் கணக்கான மைல்கட்கு அப்பாலிருக்கும் கிரேக்கத்தோடும் சீன நாட்டோடும் கடல் வாணிகம் செய்தது. தமிழர்கள் பெருவாரியாக மலேயா, சிங்கப்பூர் முதலிய கிழக்கிந்தியத் தீவகங்களிற் குடியேறியுள்ளமைக்குக் காரணம், பண்டைக் காலத்திலிருந்தே தமிழர்கள் கிழக்கிந்தியத் தீவுகளோடு செய்துவந்த வாணிபமே ஆம். உலகிலே உள்ள பல்வேறு நாடுகளிற் பரவியுள்ளதாகக் கூறப்படும் இந்திய நாகரிகம் என்பது தமிழர் நாகரிகமே. வாணிகத் துறையில் மட்டுமின்றி ஆட்சித் துறையிலும் தமிழ் நாடு அடைந்திருந்த முன்னேற்றம் சீரியதாகும்.