பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

109


வாரத்துக்கு விட்டுக் கவனிக்க மகாசபைக்கே முழு அதிகாரம் இருந்தது. வாரத்திற்கு எடுத்தோருக்கு விவசாயம் செய்கையில் எந்தவிதத் தீங்கும் ஏற்படாதவாறு கவனிக்கும் பொறுப்பும் மகாசபையைச் சேர்ந்ததாகவே இருந்தது. மேற்கூறிய கடமைகளினின்றோ, பொறுப்புகளினின்றோ தவறிய மகாசபை அதிகாரிகள் பொதுமன்றத்தினால் தண்டிக்கப்பட்டனர்.

கோவில்களுக்காகவும், பிற அறச்செயல்களுக்காகவும் அளிக்கப்படும் பணத்தையும் நிலத்தையும் ஏற்கவேண்டியது மகாசபையின் கடமைகளுள் ஒன்றாகும். ஏற்ற பணியைச் செவ்வனே செய்யவேண்டியது மகாசபையின் பொறுப்பாகும். இவ்வித அறச்செயல்களைக் கவனிக்க மகாசபை ஆண்டு தோறும் ஒரு குழுவை ஏற்படுத்தியது. மகாசபையின் நடப்புச் செலவுக்காகப் பொது நிலங்களை விற்றதும் உண்டு. இந்தப் பணத்திலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு அரசாங்க வரியை மகாசபை செலுத்தியது. மகாசபை கோவிற்குரிய நிலங்கட்கு வரி வாங்கவில்லை. வரி செலுத்தாத நிலங்களை மகாசபையே பறிமுதல் செய்தது. ஒரு சிக்கலைத் தங்களால் தீர்க்க முடியவில்லையானால் மகாசபை அதிகாரிகள் அச்சிக்கலைத் தீர்க்கத் தலைநகரின்கண் உள்ள பெரிய அதிகாரிகளுடைய கருத்தையும் அறவுரைகளையும் வேண்டுதலும் உண்டு. இந்த மகாசபைகள் தங்களுக்கெனப் பல களஞ்சியங்களும் வைத்துக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு மகாசபையிலும் மூன்று முக்கிய குழுக்கள் இருந்தன. அவையாவன :- (1) ஆட்சிக்குழு (2) குளம் மேற்பார்வையாளர் குழு (3) தோட்டவாரியக்குழு. இவை தவிரப் பிற குழுக்களும் பணியாற்றின.

இந்த மகாசபை, வட்டாரத் தலைமை அதிகாரியான சேனாபதியால் அடிக்கடி மேற்பார்வையிடப்பட்டது.