பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தமிழ் நாடும் மொழியும்


மூன்றே மூன்று தடவைகள் தான் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பழிக்குப் பழி வாங்கல் அக்கால நீதிமுறையன்று. குற்றத்தின் அளவைமட்டும் பார்த்து தண்டனை வழங்கவில்லை. குற்றத்தின் தன்மை, அது செய்யப்பட்ட சூழ்நிலை, செய்தவன் மனநிலை முதலியவற்றையெல்லாம் பொறுத்தே தண்டனை வழங்கப்பட்டது. சாவா மூவாப் பேராடுகளும், நந்தாவிளக்குமே பொதுவாகக் குற்றத்திற்கு விதிக்கப்பட்ட அபராதப் பொருள்களாகும். அறியாமற் செய்த கொலைக்குக்குக்கூட மரண தண்டனை விதிக்கப்படவில்லை .

வழக்கை விசாரிக்கும் முழுப்பொறுப்பும், அதிகாரமும் மகாசபைக்கே. மகாசபைக்கு முடியாவிட்டால்தான் மேலதிகாரிகள் அழைக்கப்படுவர். சிலசமயங்களில் ஒரு மகாசபை மற்றொரு மகாசபையின் உதவியை நாடுவதுகூட உண்டு. இதிலிருந்து சோழர் காலத்திலே நீதி நிர்வாகம் மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது எனத் தெளிவாகத் தெரிகிறதல்லவா?

வரிகள்

சோழர் காலத்தில் அரசாங்கத்திற்கு நிலவரி மூலம் தான் அதிகமான வருவாய் வந்தது. தஞ்சை போன்ற வளமான மாவட்டங்களிலுள்ள மக்கள் ஒரு வேலிக்கு 100 கலம் நெல் வரியாகத் தந்தார்கள். மேலும் சோழர் காலத்தில் பல வரிகள் போடப்பட்டபோதிலும், அவையெல்லாம் வெறும் வரிகளாக இருந்தனவே தவிர பணம் தரக்கூடிய வரிகளாக இருக்கவில்லை. தோட்டவாரிய வரி முதலிய பல வரிகள் போடப்பட்டன. உப்பள வரி, காட்டு வரி, சுரங்க வரி போன்ற வரிகள் ஓரளவுக்கு நல்ல வருவாயை அரசுக்குத் தந்தன. கலம், மரக்கால், நாழி, உழக்கு என்பன முகத்தலளவைகள். கழஞ்சு, மஞ்சாடி, காசு என்பன தங்க நிறுவைகளாம். நில