பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

117


வழங்கப்பட்டது. இக்காலத்தைப்போல் அக்காலத்திலும் மக்கள் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிட்டனர். 'சோழ நாடு சோறுடைத்து' ஆதலால் நாடெங்கணும் இலவச உணவு விடுதிகள் மக்களுக்கு உண்டிகொடுத்து உயர் நிலையில் விளங்கின. உழுதொழிலே நாட்டின் உயிர் நாடி என்பதை மன்னர்கள் உணர்ந்ததால் நீர்ப்பாசன வசதி பல செய்துதரப்பட்டன; கால்நடைகள் போற்றி வளர்க்கப்பட்டன. விவசாயத்தைப் போன்றே சோழர் காலத்தில் வாணிகமும் சிறந்து விளங்கியது. தமிழ்நாட்டு வணிகப் பெருமக்கள் நேர்மையோடு வாணிகம் செய்தனர். தவறு செய்தால் கோவிலுக்குத் தீர்வை கட்டினர். கூட்டுமுறையிலும், தனிப்பட்ட முறையிலும் மக்கள் வாணிகம் செய்தனர். அரசியலார் வரிவிதிப்பும், சுங்கமும் அன்று இருந்தன. வாணிகக்குழுக்கள் இன்றுபோல் அன்று வாணிக வளர்ச்சிக்காகப் பாடுபட்டன. பண்டமாற்று முறையே எங்கும் இருந்ததாகத் தெரிகிறது. நல்ல சாலைகள் இருந்தமையால் உள்நாட்டு வாணிகம் உயர்ந்திருந்தது. இதே போன்று கடல் வாணிகமும் தமிழர் செய்தனர். பாரசீகம், சீனா முதலிய நாடுகளோடு நம்மவர் வணிகத் தொடர்புடையோராய் இருந்தனர். உப்பு, ஆடையணிகளும் அக்காலத்தில் சிறந்த வாணிகப் பொருள்களாகக் கருதப்பட்டன. பத்திரம் எழுதிக் கொண்டு செல்வர்கள் பொருள் கடன் கொடுத்தனர். மக்கள் வட்டியுடன் பொருளைத் திருப்பிக் கொடுத்தனர். சொத்துக்களை விற்பதையும் மாற்றுவதையும் பதிவு செய்ய ‘ஆவணக்களரி' என்ற அலுவலகம் இருந்தது.

சமயம்

சோழர் காலத்திலே சைவமும் வைணவமும் தமிழ் நாட்டில் தலை தூக்கி நின்றன. அதேநேரத்தில் பௌத்த சமண சமயங்களும் ஓரளவு வாழ்ந்தன என்று கூறவேண்டும். சோழப்