பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலப் பாண்டியர் வரலாறு

127


இவனுக்குப் பின்னர் நாடாண்டவன் முதலாம் மாறவர்மன் இராசசிம்மன் என்பவனாம். இவன் கோச்சயைனின் மகனாவான். கி. பி. 740 முதல் 765 வரை பாண்டிய நாட்டை ஆண்டான். நந்திபுரம் என்ற ஊரிலே நடைபெற்ற பல்லவ பாண்டியப் போரிலே இவன் நந்திவர்மனை வென்று சிறைசெய்தான். இப்போரில் சேரரும் சோழரும் பாண்டியனுக்கு உதவியாகப் போரிட்டனர். இச்சமயத்தில் உதயச்சந்திரன் என்னும் பல்லவத் தளபதி வந்து மாற்றாரைப் புறங்கண்டான். பின்னர் பாண்டியன் மேலைக்கங்கரோடு சேர்ந்துகொண்டு மேலைச்சாளுக்கிய மன்னனான இரண்டாம் கீர்த்திவர்மனைப் புறமுதுகிட்டு ஓடும்படிச் செய்தான்.

கி. பி. 765-இல் இராசசிம்மன் மகனான சடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையன் பட்டம் பெற்றான். அதன்பின் ஏறத்தாழ அரை நூற்றாண்டு நெடுஞ்சடையன் நாட்டை ஆண்டான். வேள்விக்குடிப் பட்டயத்தை வெளியிட்டவன் இவனே. கொங்கு நாட்டை வென்று அதனைத் தன்னாட்டோடு இவன் சேர்த்துக்கொண்டான். மேலும் இவன் வேணாட்டு (திருவாங்கூர்) மன்னனையும் வென்றான். இவன் செய்த தானங்கள் கணக்கிலடங்கா. காவிரியின் வடகரையில் உள்ள பெண்ணாகடத்தில் நடந்த பல்லவ - பாண்டியப் போரில் நெடுஞ்சடையன், பல்லவனான காடவர்கோன் கழற்சிங்கனை வென்றான். மதுரைக்கருகில் உள்ள ஆனைமலையில் திருமால் கோவில் கட்டியவர் நெடுஞ்சடைனியன் உத்தர மந்திரியாகிய மதுரகவி என்பதை வேள்விக்குடிப் பட்டயத்தின் மூலம் நாம் அறியலாம். நெடுஞ்சடையனுக்குப் பின்னர் அவன் மகன் சீமாறன் சீவல்லபன் கி. பி. 830 முதல் 862 வரை பாண்டிய நாட்டை ஆண்டான். இவன் காலத்தில் ஈழ நாட்டில் பாண்டியர் பரம்பரையில் வந்தவன்போல மாயா பாண்டியன் என்பவன் ஆண்டுகொண்டிருந்தான்