பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தமிழ் நாடும் மொழியும்


இன்னும் தமிழர்களால் கொண்டாடப்படுகின்றன. கி. பி. 1275-இல் இவன் காலமாகவே, இவனோடு ஆண்ட மாறவர்மன் குலசேகரன் பட்டம் பெற்றான். குலசேகரன் ஈழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். அக்காலை ஈழ நாட்டை ஆண்டவன் பராக்கிரமபாகு என்பவனாவான். பாண்டியன் படையெடுத்து வந்தபோது பராக்கிரமபாகு பணியவில்லை. எனவே அவனை வென்று, பற் சின்னத்தை (புத்தர் பல்லுக்குக் கோவில் உண்டு) எடுத்து வந்துவிடவே, பராக்கிரமபாகு ஓடோடியும் வந்து பாண்டியனைப் பணிந்து மீண்டும் அப்பல்லைப் பெற்றுச் சென்றான்.

குலசேகர பாண்டியன் காலத்தில்தான் வெனீசு நகரத்திலிருந்து மார்க்கபோலோவும், முசுலீம் வரலாற்றாசிரியனான வாசப்பும் பாண்டிய நாட்டைச் சுற்றிப்பார்க்க வந்தனர். மேலும் தாங்கள் பார்த்த எல்லாவற்றையும் அவர்கள் எழுதி வைத்தனர். அவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் மிகவும் சிறந்தனவாகும். நமது நாட்டின் செல்வ நிலையும், முத்தும் பவளமும் அவர்தம் சிந்தையை வெகுவாகக் கவர்ந்தன.

குலசேகரனுக்கு மக்கள் இருவர். ஒருவன் சடாவர்மன் சுந்தரபாண்டியன்; மற்றொருவன் வீரபாண்டியன். வீர பாண்டியன் பட்டத்துக்குரியவனாக இல்லாத போதிலும் அவனையே குலசேகரன் ஆதரித்தான். ஆதலால் சுந்தர பாண்டியன் குலசேகரனைக் கொன்று பாண்டிய நாட்டு அரசைக் கைப்பற்றினான். உடனே உள்நாட்டுக் கலகம் ஏற்பட்டது. அந்தப் போரில் சுந்தரபாண்டியன் மதுரை மாநகரிலிருந்து துரத்தப்பட்டான். துரத்தப்பட்ட சுந்தரபாண்டியன், அல்லாவுத்தீனின் தளபதியாகிய மாலிக்காபூரின் உதவியை வேண்டினான். 'கும்பிடப்போன சாமி குறுக்கே வந்ததைப்போல' பாண்டியனே வேண்டுகோள் விடுக்கவே மாலிக்காபூர் படையுடன் வந்தான்;