பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தமிழ்நாடும் மொழியும்


என்பவர் செஞ்சியானது லிச்பனைப் போன்று பெரியதொரு பட்டணமாய் விளங்கியதாக எழுதி உள்ளார். மேலும் கிருஷ்ணப்பன் காலத்தில் டச்சுக்காரர் கடலூரில் தங்கள் அலுவலகம் ஒன்றினை அமைத்தனர். வேலூரை ஆண்ட நாயக்கர்களில் முற்பட்டவன் வீரப்ப நாயக்கன் ஆவான். இவன் மகன் சின்ன பொம்மன் (கி. பி. 1549-1582) சிறந்த வீரனாவான். எனினும் இவன் செஞ்சி நாயக்கனுக்குக் கீழ்ப்பட்டிருந்தான். இவனுக்குப் பின் பட்டமேறிய லிங்கம நாயக்கன் செஞ்சிப் பிடியிலிருந்து வேலூரை மீட்கத் திட்ட மிட்டான். ஆனால் செஞ்சிப் படைத் தலைவன் சென்ன நாயக்கன் கி. பி. 1604-இல் லிங்கமனை வென்றான். இப் பெரு வீரன் பெயரால்தான் சென்னைப் பட்டினம் அவனது மகனால் நிறுவப்பட்டது. விசய நகர மன்னன் அச்சுத நாயக்கன் காலத்தில் தஞ்சையில் நாயக்க அரசு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சையை முதலில் ஆண்டவன் அச்சுதனின் சகலனான செவ்வப்பன் ஆவான். தஞ்சை நாயக்கர்களில் சிறந்த வீரனாகவும், அரசனாகவும், எழுத்தாளனாகவும் விளங்கியவன் இரகுநாத நாயக்கன் ஆவான். தெலுங்கு, வட மொழி இவ்விரு மொழிகளிலும் இவன் பல நூல்களை எழுதி ஏற்றம் பெற்றான். கி. பி. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் பீசப்பூர் சுல்தானின் தூண்டுதலின் காரணமாய் மராட்டிய மன்னனான வெங்காசி (சிவாசியின் சகோதரன்) நாயக்கர் அரசை ஒழித்து, மராட்டிய அரசாட்சியைத் தஞ்சையில் ஏற்படுத்தினான். இவன் கி. பி. 1675-1712 வரை ஆண்டான். இவனால் நிறுவப்பட்ட மராட்டிய அரசு தஞ்சையில் கி. பி. 1855 வரை நீடித்திருந்தது. இவர்களின் கலையார்வத்தால் தஞ்சை அக்காலத்தில் ஒரு கலைக்கூடமாக விளங்கியது.