பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மக்களாட்சிக் காலம்

155


இவ்வெண்ணத்தை அடியோடு மாற்றி, “தனியரசு எங்கள் பிறப்புரிமை” என்று எங்கும் முழக்கமிட்டார். இம் முழக்கத்தைக் கேட்ட மக்கள் புத்தொளி பெற்றுப் புதுவேகத்துடன் விடுதலைக்காகப் பணியாற்றத் தலைப்பட்டனர். இதனைக் கண்ட ஆங்கிலேயர், மக்களைச் சிறையிலடைத்தனர். பலரை நாடுகடத்தினர். இக்காலத்தில் தான் அரவிந்தர் புதுவை சென்று வாழ ஆரம்பித்தார்.

திலகருடைய வழி நின்று தீரமுடன் பணியாற்றிய முதல் வீரத்தமிழர் வ. உ. சிதம்பரனார் ஆவார். இவர் பாஞ்சாலங் குறிச்சிக்கு அருகிலுள்ள ஓட்டப்பிடாரத்தில் பிறந்தவர். சிறந்த தமிழறிஞராகிய இவர் வீரம் செறிந்த விடுதலை வீரராக விளங்கி ஆங்கிலேயர் அயரும்படி நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டார். இவர் ஆங்கிலேயரது பி. ஐ. எஸ். என். கழகத்தை (British India Steam Navigation Company) எதிர்த்துத் தாமே ஒரு கப்பல் கழகத்தை நிறுவி ஆங்கிலேயரது வியாபாரத்தை ஓங்கவிடாது செய்து “கப்பலோட்டிய தமிழர்” என இத்தரணியிலுள்ளார் போற்றும் வண்ணம் அயராது உழைத்தார். இதன் காரணமாய் இவரை அரசாங்கம் சிறையில் தள்ளியது. கடுஞ்சிறையில் இவர் கசையடிபட்டார்; செக்கிழுத்தார். எனினும் இறுதி வரை இப்பெரியார் தென்னகத்தின் முடிசூடா மன்னராகவே வாழ்ந்து மறைந்தார். மேலும் இவர் தொழிலாளர் இயக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராகவும் பணியாற்றினார். இக்காலத்தில் தான் பாட்டுக்கு ஒரு புலவனாகிய பாரதியார் பைந்தமிழ்ப் பாக்கள் பாடி பாமர மக்களைத் தட்டி எழுப்பினார். வங்க மக்களுக்கு விடுதலை உணர்ச்சியையும், வீரத்தையும் ஊட்டிய கவிஞர்கள் தாகூர், சரோசினிதேவி இவர்களது வரிசையில் வைத்து எண்ணப்படும் அளவிற்கு நம் பாரதியாரும் விளங்கினார்.