பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தமிழ்நாடும் மொழியும்


லுக்கு ஒளிவுடையது (தமம்-ஒளி) என்று பொருள் தருவர். இக்கருத்தையே கார்த்திகேய முதலியாரும் கூறியுள்ளார். ‘திராவிடப் பிரகாசிகை' என்னும் நூலாசிரியர் சபாபதி நாவலர் தமிழ் என்பதற்கு இனிமை என்னும் பொருளை வற்புறுத்தியுள்ளார். இப்பொருளே பொருத்தமுடையது என அறிஞர் பலர் முடிவு செய்துள்ளமை நாமறிந்ததொன்றே. நந்தாமணியாம் சிந்தாமணியில் இனிமை என்னும் பொருளில் தமிழ் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. ‘தமிழ் தழீ இய சாயலவர்' என்பதில் தமிழ் என்னும் சொல் இனிமை என்னும் பொருளில் வருதலைக் காண் கிறோம். கவிக்குயில் பாரதி 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்' என்று தமிழி னுடைய இனிமையை உணர்த்தியுள்ளார். 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பிங்கலந்தை நிகண்டு உரைக்கின்றது.

தமிழ்மொழியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் பலர் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவ்வறிஞருள் ஒருவராகிய ஆல்பர்ட் என்பவர் திராவிடன் என்னும் சொல்லே திரமிடம், தமிழகம், தமிழ் என்றாயிற்று எனக் கூறியுள்ளார். டாக்டர் சுப்பிரமணிய சாத்திரியார் என்பவரும் தமிழ் முதலில் நாட்டைக் குறித்துப் பின்னர் மொழியைக் குறித்தது என்று கூறியுள்ளார். ஒருசிலர் தென்மொழி என்பது தமிழ் என்று மருவிற்றென்பர். வேறு சிலர் மள்ளர் என்ற இனத்தவர் பேசிவந்த மொழி மள்ளம் என்றும், அச்சொல்லோடு 'திரு' என்ற அடையைச் சேர்த்துத் திருமள்ளம் என்று மக்கள் வழங்கினர் என்றும், அச்சொல் நாளடைவில் திரிந்து தமிழ் ஆயிற்றென்றும் கூறுவர். ஆனால் இவையனைத்தும் பொருந்தாக் கூற்றுக்களாகும். சுருங்கக் கூறின் தமிழ் என்னும் பெயர் தங்கள் தாய்மொழிக்குத் தமிழர்களாலே இடப்பட்டது