பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழின் தொன்மையும் சிறப்பும்

163


வளர்ச்சியுள்ள மொழியாகக் கூறப்படும் துளுவ மொழியில் இலக்கியம் என்று சொல்லத்தக்க அளவிற்கு எந்த நூலும் இல்லை. குடகு மொழிக்கு எழுத்தும் இலக்கியமும் கிடையா. எனவே இதுவரை கூறியவற்றால் திராவிடமொழிகளில் நந்தமிழே மிகத் தொன்மை வாய்ந்தது என்பது வெள்ளிடைமலையாகும். உலக மொழிகளிலே தமிழ் மிகவும் பழமையானதென்று கூறினும் தவறில்லை. அறிஞர் ஞானப் பிரகாசர் தமிழ் எல்லாத் திராவிடமொழிக்கும் அடிப்படையானது என்று எழுதி உள்ளார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும்,

'கன்னடமும் களி தெலுங்கும், கவின் மலையாளமுந்
துளுவும் உன்னுதரத்து உதித் தெழுந்து ஒன்று பல
ஆயிடினும்'

என்று தமிழிலிருந்தே ஏனைய திராவிட மொழிகள் பிறந்ததாகக் கூறியுள்ளார். அறிஞர் கால்டுவெலும் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பற்றிப் பின்வருமாறு எழுதிஉள்ளார்.

'தமிழ் மொழி பண்டையது; நலம் சிறந்தது; உயர் நிலையிலுள்ளது; இதைப் போன்ற திராவிட மொழி வேறு எதுவும் இல்லை'.

தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதற்கு அவர் பின்வரும் ஆறு சான்றுகளைக் காட்டுகின்றார்.

1. தமிழில் நூல் வழக்கு நடைக்கும் உலக வழக்கு நடைக்கும் வேற்றுமை அதிக அளவிற்கு உள்ளது. நூல் வழக்கு நடையில் வடமொழிக் கலப்பு அருகிக் கிடக்கின்றது; தனித் தமிழ்ச் சொற்களையே காணுகின்றோம். இத்தகைய செந்தமிழ் நடையை மக்கள் ஒரே காலத்தில் உண்டாக்கி இருத்தல் அரிது. பல ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும்.