பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

தமிழ்நாடும் மொழியும்


"செந்தமிழ் நாடே, சந்தனப் பொதியச்
                                          [செந்தமிழ் முனிவனும்
சவுந்திர பாண்டியன் எனுந் தமிழ்நாடனும்
சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநாடென்ப"

எனக் கூறிச் சென்றுள்ளார். இப்பிரிவு பற்றிப் பேராசிரியர் பி. டி. சீனிவாசனர் அவர்கள் கருத்தாவது:-

"செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு, நாம் வழக்கமாக எண்ணுவதுபோல, பாண்டிய நாட்டில் வழங்கும் மொழி ஏனைய பன்னிரு நிலமொழிகளிலும் உயர்ந்தது என்னும் கருத்திலன்று. ஒன்றின் உயர்வும் தாழ்வும் மற்றொன்றுக்கும் உண்டு. ஆனால் பாண்டிய நாட்டில்தான் முதன் முதலில் எழுத்துமொழி செம்மைப்படுத்தப்பட்டது. அக்காலை இதே எழுத்து மொழி பிற நாடுகளிலும் கையாளப்படும் பொழுது அந்நாட்டவர்கள் எழுத்து மொழியிலே பேச்சு மொழிகள் பலவற்றைச் சேர்த்துக்கொண்டனர்.”

இதுகாறும் கூறியவற்றுல் செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு பண்டைக்காலத்தில் இல்லை என்பதும், அப் பிரிவு இடைக்காலத்தில் உரையாசிரியர் சிலரால் கற்பிக்கப்பட்டது என்பதும், செந்தமிழ் நாடு என்பது பாண்டி நாடே என்பதும் நன்கு விளங்கும்.