பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முத்தமிழ்

173


பாரதீயம் ஆகிய பண்டை இசைத் தமிழ் நூல்கள் இருந்து இறந்தன என்பதை அறிகிறோம். சங்கத் தொகை நூல்களிலே இசைத் தமிழை நம்முன் காட்டிக் களிப்பூட்டுவது பரிபாடல் என்ற ஒரு நூலே. அந்நூலும் முற்றும் கிடைக்கவில்லை. ஒரு நூல்தானே கிடைத்துள்ளது என்று எண்ணி சங்க காலத்திலே இசைத் தமிழ் அவ்வளவு தூரம் வளர்க்கப் படவில்லையோ என ஐயுறல் அறிவுடமையன்று. சங்க காலத்திலே இசை நன்கு வளர்க்கப்பட்டது: சங்கச் சான்றோர்கள் நிலத்தைக் குறிஞ்சி முதலிய ஐந்து வகையாகப் பிரித்தனர். அதுமட்டுமல்ல; ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய இசையும், அவ்விசையைப் பாட வல்ல இசைக் கருவிகளும் இன்ன இன்ன எனத் தம் அரும்பொருட் களஞ்சியமான நூல்களிலே குறித்துச் சென்றுள்ளனர்.

குறிஞ்சிக்குப் பண் குறிஞ்சிப் பண். அதனைப் பாடற்குக் கருவி யாம யாழ், தொண்டகப் பறை என்பன. முல்லைக்குப் பண் சாதாரி, கருவி ஏறுகோட் பறை. மருதத்துக்குப் பண் மருதப் பண்; கருவி மண முழவு. நெய்தல் நிலப் பண் செவ்வழிப் பண்; கருவி மீன் கோட் பறை. பாலைக்குப் பண் பாலைப் பண்; கருவி நிறைகோட் பறை. இவற்ருேடு ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்தனியாக யாழ் என்ற இசைக் கருவியும் இருந்தது.

இன்று நாகரிகத்தின் உச்சியிலே நிற்பனவாக நம்மவரால் புகழ்ந்து போற்றப்படும் நாடுகள் எல்லாம், உடைக்கும் உணவுக்குமே காற்றோடும் கடுவிலங்கோடும் போராடிக் கொண்டிருந்த காலத்திலே, நிலத்தின் தன்மை அறிந்து, அதை ஐவகையாகப் பிரித்து, அவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பண்ணையும், அவ்வப் பண்களைப் பாடற்குரிய ஐவகை இசைக் கருவிகளையும் உருவாக்கி இசைத் தமிழை வளர்த்த தமிழ் மூதாதையர்களை என்னென்று புகழ்வது?