பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. தமிழ் இலக்கண வளர்ச்சி

மிழ் முப்பகுப்புடையது என முன்னர்க் கண்டோம். தொன்றுதொட்டே நம் புலவர் பெருமக்கள் தமிழை மூவகைத் துறைகளில் வளம்படச் செய்துவந்திருக்கின்றனர். தமிழ் இயலிசை நாடகம் என மூவகையாக வளர்ந்து ஓங்கிச் செழித்திருக்கிறது. இனி இம் மூவகைத் தமிழ் இலக்கணங்களின் வளர்ச்சியைப் பார்ப்போம்.

இன்று இயற்றமிழிலே இலக்கண நூல்கள் மிகவும் பெருகி உள்ளன. இயற்றமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணமென ஐந்து வகைப்படும். எழுத்துக்கும் சொல்லுக்கும் தனி இலக்கண நூல்களும், அகப்பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என ஒவ்வொரு துறையிலும் இலக்கண நூல்களும் உள. ஆனல் தொடக்கத்தில், அஃதாவது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு இல்லை. எல்லாவற்றிற்கும் சேர்த்தே ஓர் இலக்கண நூல் இருந்தது. தொல்காப்பியம் அதற்குச் சான்று தரும். சின்னஞ்சிறு ஆல வித்திலிருந்து ஏராளமான கிளைகள் கிளைப்பதைப்போலத் தொல்காப்பியத்திலிருந்து பல இலக்கண நூல்கள் கிளைத்துள்ளன.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றிற்கும் இலக்கணம் கூறும் நூலாகும். இந்நூலாசிரியராகிய தொல்காப்பியர் தொல்காப்பியக் குடியிற் பிறந்தவர். இவரது காலம் கி. மு. 500 க்கும் 300 க்கும் இடைப்பட்ட காலமாக இருத்தல் வேண்டும். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. யாப்பிலக்கணமும் அணியிலக்கணமும் பொரு-