பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தமிழ்நாடும் மொழியும்


ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு மேலாகியும் அதனை ஒப்பப் பிறிதொரு நூல் இன்னும் தோன்றவில்லை. இந்நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இது திராவிட மொழிகளின் இலக்கணங்களை நன்கு ஒப்பிட்டுப் பார்த்து, அம் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகத் தமிழ் விளங்குகின்றது என அறுதியிட்டுக் கூறுகின்றது. மேலும் திராவிட மொழிகளில் தமிழ் மொழி ஒன்றே வடமொழியின் துணையின்றித் தனித்தியங்கும் ஆற்றல் மிக்கது என்றும் இந்நூல் கூறுகின்றது. வட மொழியில் கலந்துள்ள பல தமிழ்ச் சொற்களைப் பற்றிய செய்திகளையும் இதனால் நாம் நன்கு அறியலாம். கால்டுவெல் காட்டிய வழிலே நின்று இன்று பேராசிரியர்கள் ரா. பி. சேதுப்பிள்ளை, மு. வரதராசனார், தேவநேயப் பாவாணர், சி. இலக்குவனார் என்போர் சில நூல்களை வெளியிட்டுள்ளனர். பேராசிரியர் வி. ஐ. சுப்பிரமணியம் என்பவரும் அமெரிக்கா சென்று இத்துறையில் பயிற்சிபெற்று டாக்டர் பட்டம் பெற்றுத் திரும்பி உள்ளார்.

நாடக இசைத் தமிழிலக்கண வளர்ச்சி

இயற்றமிழ் இலக்கண வளர்ச்சியைப் படித்துவிட்டு நாடக இசைத்தமிழ் இலக்கண வளர்ச்சியை நோக்கும் பொழுது நம் மனம் பெரிதும் வருத்தம் அடையவே செய்யும். வளராதது மட்டுமல்ல; வளர்ந்துள்ள நிலையினைக் காட்டும் நூல்களும் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. அந்த நூல்களின் பெயர்களையே நம்மால் அறிய முடிகின்றது. அதுவும் அடியார்க்கு நல்லார் உரை இல்லையேல் நாம் ஒன் றும் அறிய முடியாது.

பரதம், அகத்தியம், சயந்தம், குணநூல், செயிற்றியம், இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு முதலியன இசை நாடகத் தமிழ் நூல்களாம்.