பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/226

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் நெடுங்கணக்கும் பிறவும்

209


ஒரு நாட்டிலே வாழுகின்ற மக்களே, ஒரு பொருளுக்குப் பல பெயர்களை வழங்குதல் இயல்பு. ஓரிடத்தார் வழங்கும் பெயரை மற்றோரிடத்தார் வழங்கார். ஒரு பொருளுக்கு ஒரு நாட்டின் வடபால் வசிப்போர், ஒரு பெயரை வழங்குவர்; மேற்கே வாழ்வோர் வேறொரு பெயரை அப்பொருளுக்கு வழங்குவர். எடுத்துக்காட்டாக, உள்ளி என்ற ஒரு பொருளை எடுத்துக்கொள்ளுவோம். இதனைத் தென்பாண்டி நாட்டார் ஈறுள்ளி என்றும், உள்ளி என்றும் கூறுகின்றனர். ஆனால் மதுரை மக்கள் இப்பொருளையே வெங்காயம் என்ற பெயரால் குறிக்கின்றனர். இத்தகைய சொற்களையே திசைச் சொற்கள் என்று இலக்கணம் வல்லார் குறிக்கின்றனர்.

எழுத்துக்கள்

தமிழகத்திலே வழங்கும் எழுத்துக்கள் பல. அவை வடிவெழுத்து, பெயர் எழுத்து, தன்மையெழுத்து, முடிவெழுத்து, கண்ணெழுத்து, கோலெழுத்து, கரந்தெழுத்து, வட்டெழுத்து, கிரந்தெழுத்து முதலியனவாகும்.

கண்ணெழுத்து

கண்ணெழுத்துப் பற்றிய குறிப்புகள் சிலம்பிலே காணப்படுகின்றன. கண்ணெழுத்து என்ற ஒருவகை எழுத்து வணிகத்தின் பொருட்டுப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. பூம்புகாரின் கடற்கரையிலே இறக்கப்பட்ட பண்டப் பொதிகளின் மீது கண்ணெழுத்துப் பொறிக்கப்பட்டிருந்தது என்பதைக் கீழ்வரும் சிலப்பதிகார வரிகள் தெரிவிக்கின்றன.

"வம்ப மாக்கள் தம்பெயர் குறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி"

-சிலப். 26: 13-16.