பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தமிழ்நாடும் மொழியும்


முதலியவை குறித்துப் பல கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டு வந்தது.

மேற்கூறிய சங்கங்கள் தவிர மதுரைத் திருவள்ளுவர் கழகம், காரைக்குடி கம்பன் கழகம், நெல்லை அருணகிரி இசைக் கழகம், துரத்துக்குடி சைவ சித்தாந்த சபை, தென் காசித் திருவள்ளுவர் கழகம், சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் முதலிய தமிழ்ச் சங்கங்கள் தமிழ் மாநாடுகள் கூட்டியும், தமிழ் விழாக்கள் நடத்தியும் இன்று தமிழ்த் தொண்டு பல புரிந்து வருகின்றன. இவற்றுள் சென்னை மாநிலத் தமிழ்ச்சங்கம் தமிழின் வளர்ச்சிக்காகப் பல பணிகள் புரிந்து வருவது நாம் அறிந்ததொன்றே. இதன் செயலாளர் நெல்லை மாவட்டத்து முதுபெரும் புலவர்களில் ஒருவராகிய திரு. இ. மு. சுப்பிரமணிய பிள்ளையாவார்கள். இச்சங்கமானது கலைச் சொற்கள் தொகுத்துக் கொடுத்தமையும், சென்னை அரசினர்க்கு ஆட்சிச் சொற்கள் உருவாக்கிக் கொடுத்தமையும், அண்மையில் ஆசிரியர் பயிற்சிக்குரிய சொற்களை ஆக்கியளித்தமையும் தமிழ் வளர்ச்சிக்கு இச்சங்கம் புரிந்த நிலையான தொண்டுகளாகும்.

மேலை நாட்டார் செய்த தமிழ்த் தொண்டு

தமிழகத்திற்கு வந்த மேலை நாட்டு நல்லறிஞர் தம் சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழைக் கற்றனர். தமிழிலே தம் சமயக் கருத்துக்களை எழுதிப் பரப்பினர். இவ்வாறு அவர்கள் தமிழைக் கற்றதன் மூலமாக கிறித்தவம் மட்டுமின்றித் தமிழும் பல நன்மைகளை அடையலாயிற்று. மேலை நாட்டுக் கிறித்தவர்களால் தமிழ் மொழி அடைந்த நன்மை ஒன்றா? இரண்டா? கிறித்தவரிற் சிலர் தமிழ் நாட்டுக் கலைச் செல்வத்தை மேலை நாட்டுக்குக் காட்டினர். வேறொரு சிலர் தமிழிலக்கியத்தின் பண்புகளைப் பாட்டாலும் உரையாலும்