பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/248

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ச்சி

231


விளக்கி அருளினர். மற்றொரு சிலர் இலக்கண வாயிலாக ஆராய்ந்து, தமிழின் தொன்மையையும் செம்மையையும் துலக்கினர். மேலை நாட்டு முறையில் தமிழகராதி தொகுத்து உதவினர் மற்றுஞ் சிலர். இன்னுஞ் சிலர் தமிழில் உரை நடை நூல்களைப் பெருக்கினர். இவ்வாறு பல வகையானும் தமிழுக்குத் தொண்டு செய்த பிற நாட்டு நல்லறிஞருள், டாக்டர் போப், டாக்டர் கால்டுவல், வீரமாமுனிவர், எல்லீசர், ரேனியசு ஐயர் என்போர் குறிப்பிடத் தகுந்தோராவர்.

டாக்டர் போப் அவர்கள் தமிழுக்குச் செய்த தொண்டுகள் பலவாகும். இவர் தமிழின் பெருமையினை உலகறியச் செய்ய மிகவும் பாடுபட்டார். திருவாசகத் தேனை ஆங்கில மொழிக் குவளையில் ஊற்றித் தன்னாட்டவருக்கு வழங்கினர். இது போன்றே இவர் நாலடியாரையும், குற ளையும் , ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் இவர் பல ஆங்கில வெளியீடுகளில் தமிழினைப்பற்றி பல கட்டுரைகளை எழுதினார்: தமிழ்ச் செய்யுட்களைத் தொகுத்து வெளியிட்டார். ஆங்கிலத்திலும் அவற்றை மொழி பெயர்த்தார். சுருங்கக் கூறின் டாக்டர் போப் தமிழ் இலக்கியத்தின் பெருமையை மேலை நாட்டு மக்களுக்குக் காட்டினார். இவரைப் போன்றே டாக்டர் கால்டுவல் தமிழ் முதலிய திராவிட மொழிகளின் ஒற்றுமையினை உலகுக்கு அறிவுறுத்தினர். உலகம் உள்ளளவும் திராவிட மொழிகளின் சிறப்பைப் பறையறைய வல்ல திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' (A Comparative grammar of Dravidian languages) என்ற நூலை இயற்றியவர்" இவரே. வீரமாமுனிவர் என்பவர் கம்பனைப் போல ஏசுவின் கதையைத் தமிழிலே காவியமாகப் பாடினார். அதற்குத் தேம்பாவணி என்று பெயர். இது தவிர, இவர் பல சின்னூல்களும் கட்டுரைகளும் எழுதி உள்ளார். இவரால் இயற்றப்பட்ட சதுர அகராதி குறிப்பிடத்தகுந்ததாகும். எல்லீசர் என்பவர் நம்